மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளி நிறுவனத்தின் 9-ஆவது தளத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியதால் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 5 ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அண்மையில் 9 தளங்கள் கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளி நிறுவனம் திறக்கப்பட்டது. இங்கு ஜவுளிகள், தங்க நகைகள், மின்னணு சாதனங்கள் உள்பட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஜவுளி நிறுவனத்தில் இன்று புதன்கிழமை அனைத்து தளங்களிலும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
இந்நிலையில் 9-ஆவது தளத்தில் இயங்கி வரும் உணவகப்பிரிவில் ( புட் கோர்ட்) மாலை 4 மணியளவில் குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த தளம் முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து கீழே இறங்கினர். தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க ஊழியர்கள் முயன்ற நிலையில் கட்டுக்குள் வராத தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் விரைவாக பரவியது. இதனால் நிறுவனத்தின் அனைத்துத் தளங்களிலும் இருந்து பொதுமக்கள், ஊழியர்கள் என அனைவரும் வெளியேறினர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதால் அங்கு பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தகவலின்பேரில் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. ஆனால் அதற்குள் தீ பெருமளவு பரவியதால் 8 மற்றும 9ஆவது தளங்களுக்குள் வீரர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தீ விபத்தில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 2 பெண் ஊழியர்கள் உள்பட 5 ஊழியர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மதுரை திடீர் நகர், மேல அனுப்பானடி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி குடிநீர் வாகனங்கள், டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தளங்களில் புகை வெளியேற வழி இல்லாததால் தீயணைப்பு வீரர்கள், அனைத்து தளங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் அனைத்தையும் உடைத்து புகை வெளியேற வழி ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து தளங்களில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தளங்களில் தீயைக்கட்டுப்படுத்தும் ரசாயன நுரை மற்றும் நீரை பீய்ச்சி தீயைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
தீ விபத்து குறித்த தகவலின்பேரில் மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், காவல் துணை ஆணையர்கள் அரவிந்த், ஆறுமுகசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புப் பணிகளை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, ஜவுளி நிறுவனத்தில் இருந்து பாதுகாப்பான தூரத்துக்கு பொதுமக்களை அப்புறப்படுத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஜவுளி நிறுவனத்தில் தற்போது தீ விபத்து நடைபெற்ற 9ஆவது தளத்தில் எவ்வித தீ தடுப்பு உபகரணங்களும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் மாலை 3 மணிக்கே சிறிய அளவில் புகை வந்துள்ளது. ஆனால் நிர்வாகம் அதை அலட்சியப்படுத்தியதால் பெருமளவில் தீ ஏற்பட்டு அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது. தீ விபத்து சிறிய அளவில் இருந்தபோதே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்திருந்தால் உடனடியாக தீயை அணைத்திருக்கலாம். நிர்வாகம் தீ விபத்தை மறைக்க செய்த முயற்சியே பெரிய அளவில் விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படுகிறது.