முதலமைச்சர் ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளையொட்டி சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே அதிகாலையிலேயே குளித்து புத்தாடை அணிந்த முதல்வர் ஸ்டாலின் முதல் வேளையாக கோபாலபுரம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து அங்கிருக்கும் கருணாநிதி புகைப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய அவர் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய கையோடு பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து சென்னை சிஐடி காலனி இல்லம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராஜாத்தி அம்மாளிடம் நேரில் ஆசி வாங்கினார். எப்போதும் வீட்டு கதவு அருகே நின்று தனது அண்ணன் ஸ்டாலினை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் கனிமொழி எம்.பி. இன்று முதல்வரின் கார் வந்து நின்ற இடத்திற்கே சென்றுவிட்டார்.
ராஜாத்தி அம்மாளிடம் ஓரிரு நிமிடங்கள் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் ராஜாத்தி அம்மாளை தேடி வந்து ஆசி வாங்கிச் சென்றதால் கனிமொழிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. இதனிடையே அவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி தனி வீடியோ ஒன்றையே வெளியிட்டுள்ளார். அதேபோல் மகளிர் அணி சார்பில் நேற்றைய தினமே வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியை ஹெலன் டேவிட்சன் மூலம் நடத்திவிட்டார் கனிமொழி.