தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு கூட வன்கொடுமை தடுப்பு சட்டம் இருப்பது குறித்து விழிப்புணர்வு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி சாடியுள்ளார்.
பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதாக 1989ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இச்சட்டம் 1995ம் ஆண்டுதான் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும் பாதிக்கப்படும் பட்டியலின மக்கள் புகார் கொடுத்தாலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்று பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் (SCP/TSP) ஆகியவை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ‘சமூக அமைப்புகளின் மாநாடு’ சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விசிக எம்பி திருமாவளவன் பேசியதாவது:-
அரசின் மொத்த வருமானத்தில் குறிப்பிட்ட அளவு பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சி நிதிக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால் அரசு தனது வருமானத்தில் சாலை, குடிநீர் தொட்டி, பள்ளி உள்ளிட்டவற்றை அமைத்து விட்டோம் என்று கூறுகிறது. இதனை ஏற்க முடியாது, ஏனெனில் இவை அனைத்தும் பொது வருமானத்திலிருந்து கட்டப்பட்டிருந்தாலும் இது அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. இப்படி அமைக்கப்படும் யாவும் பட்டியலின மக்கள் வாழும் இடங்களுக்கு அருகில் அமைக்கப்படுவதில்லை. இவ்வளவு பெரிய கட்டிடங்கள் ஏன்? தண்ணீர் குழாய் கூட இப்பகுதியில் அமைக்க மாட்டார்கள். நிதி ஒதுக்கீடு இப்படி இருக்கையில் மத்திய அரசு பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய நிதியை மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்துவது சரியானதல்ல.
பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் என அனைத்தும் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கு உதவவும், இந்த வளர்ச்சியை உறுதி செய்யவும் மத்திய அரசு கொண்டுவந்த புரட்சிகர நடவடிக்கையாகும். ஆனால் இது முறையாக நடைமுறைப்படுத்தாததால் இன்றும் இம்மக்களின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. தெலங்கானாவில் ‘தலித் பந்து’ திட்டம் மூலம் பட்டியலின மக்களை தொழில் முனைவோர்களாக மாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ, அரசு அதிகாரிகளுக்கு கூட வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. என இந்நிலையை மாற்ற கொண்டு வரப்பட்டதுதான் ‘உட்கூறுத் திட்டம்’.
தெலங்கானாவில் சமீபத்தில் இயற்றப்பட்ட சிறப்பு திட்டம் மூலம் பட்டியலின் மக்களின் நலனுக்கு உதவும் திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அம்மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்களின் நிதிகள் முழுக்க முழுக்க அம்மக்களுக்காகவே செலவழிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் இதுபோன்று சிறப்பு திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இது குறித்து எதிர்வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விசிக சார்பில் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1974 மற்றும் 1978ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் மற்றும் பழங்குடியினருக்கான துணை திட்டம் தமிழ்நாட்டில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே கடந்த 6 ஆண்டுகளில் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.5,318 கோடி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.