ஆட்சிக்கு வந்து 22 மாதத்தில் ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து,மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். கடைசியாக பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்ததோ அதைத்தான் திமுகவும் செய்கிறது. கூடுதலாக ஒரு ஆணையத்தை அமைத்துள்ளார்கள் அவ்வளவுதான். ஆனால், எங்களை கையாலாகாத அரசு என்று பழி சுமத்தினார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிறது. 39 எம்பிகளை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் நீட் ரத்து குறித்து எந்த அழுத்தமும் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் காவிரி பிரச்சினை வந்தபோது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே நாங்கள் குரல் கொடுத்து தீர்வை பெற்றோம். ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் இருப்பது கண்துடைப்பு வேலை. சட்டப்போராட்டம் என்று உதயநிதி சொல்வது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. இதை நம்பி மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் திமுக விமர்சித்தது. ஆனால், டெல்லி பயணங்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவ கல்லூரியை பெற்று தந்தார். சாலை கட்டமைப்புகளை நிதி பெற்று கொடுத்தார். மேம்பாலங்கள் கட்டமைப்புக்கு நிதி பெற்று தந்தார். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதத்தில் ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் நிதிநிலை வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தெரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.