ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று: கி.வீரமணி

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் அதிகரிக்கலாமே தவிர குறையாது. மற்ற கூட்டணியில் சில கட்சிகள் காணாமல் போகலாம்” என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி கூறியதாவது:-

தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதல்வர் சமூக நீதியின் சரித்திர நாயகன் ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று. மகளிர் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இது தமிழ்நாட்டோடு நின்றுவிடாமல் திராவிட மாடல் நாடு முழுவதும் பரவ வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சியை எதிர்ப்பதற்கான முன்னோட்டமாக இன்று மாலை முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் ஒன்றிணைகின்றனர். மற்ற இடங்களில் தேர்தல் நேரங்களில் அரசியல் கூட்டணியாக மட்டுமே உள்ளது. திமுக கூட்டணி தேர்தலுக்காக இல்லாமல் கொள்கைகளுக்காகச் சேர்ந்த கூட்டணி என்பதால் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது.

சமூக நீதி, சுயமரியாதை, மதச்சார்பின்மையைப் பின்பற்றும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் தமிழ்நாட்டைத் தாண்டி நாடாளுமன்ற தேர்தலில் பயன்பட வேண்டும். முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதை விட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று. திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் அதிகரிக்கலாமே தவிர குறையாது. மற்ற கூட்டணி கட்சியில் சில கட்சிகள் காணாமல் போகலாம். இவ்வாறு அவர் கூறினார்.