டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.
டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிற்பகலில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார்.
இதனைத் தொடர்ந்து மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “கடந்த முறை சென்னை வந்த பிரதமர், அடுத்து டெல்லி வரும்போது தன்னை பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டோம், உடனே கொடுக்கப்பட்டது. பிரதமரைச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. தமிழ்நாடு முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல் பிரதமரின் தாயார் மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன்” என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் விளையாட்டு தொடர்பான விஷயங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். முதல்வர் கோப்பை குறித்த விவரங்களை எடுத்துக் கூறினேன். அடுத்தமுறை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதேபோல், இந்திய விளையாட்டு ஆணையம் தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். தொகுதிகள் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்து பிரதமரிடம் பேசினேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அப்போது அது தொடர்பாக அவர் சில விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலை இதுதான், அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கூறினேன். அதேபோல், நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று கூறினேன். பிரதமர் உடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்காமல் இருப்பது தொடர்பாக பிரதமரிடம் ஏதேனும் கோரிக்கை விடுத்தீர்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, இதற்கு அடிக்கல் நாட்டியது பிரதமர். பணிகள் தொடங்கவில்லை என மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது நான்தான். பிரதமரிடம் கேட்க வேண்டியதை என்னிடம் கேட்கிறீர்களே.. இதைப் பற்றி நான் இப்போது பிரதமரிடம் பேசவில்லை என கூறினார்.
அப்போது மக்களின் ஏராளமான பிரச்சனைகள் திமுக ஆட்சியில் தீர்க்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் தற்போது பேனா சின்னம் மிகவும் அவசியம் என நினைக்கிறீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில், தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார்.
அரசியல் தொடர்பாக ஏதும் பேசினீர்களா என்ற கேள்விக்கு, அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. நீட் பிரச்சனையே அரசியல் தானே.. என்றார். கூட்டணி தொடர்பாக எல்லாம் எதுவும் பேசவில்லை என்றார்.