ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம்: அன்புமணி

ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து என்றும் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறியிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து. இந்த கூத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து. இது ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை தேடித் தந்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முமாமிட்டிருந்ததால் கடந்த ஒரு மாத காலம் தமிழகம் ஸ்தம்பித்தது. ஆட்சி நிர்வாகம் தேக்கமடைந்தது. தேர்வில் காப்பி அடித்தாலும் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் போல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே, இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம். இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என தெரியாது, ஆனால் ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பது மட்டும் உண்மை.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. இதனை தடுக்க முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொ்ருட்கள் விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில் மது கடைகள் மூடப்படும் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, இளைஞர்களை மது போதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்றார். போதை தெளிந்துவிட்டால் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் திராவிட கட்சிகளுக்கு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பு. இந்த விலை உயர்வை ஏற்க முடியாது என்பதோடு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். அதற்கான பணிகள் நாடாளுமன்றத் தேர்தலின் போது தொடங்கப்படும். திமுகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். லாபத்தில் இயங்கி வரும் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்கள் கேஸ் விலையை உயர்த்துவது தவறு. எனவே இன்று உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை அவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த வாரத்தில் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.