தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி சிலர் திட்டமிட்டு வீடியோக்களை பரப்பி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பீகார் சட்டசபையில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வடமாநில தொழிலாளர்கள் தென்மாநிலங்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு வருவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஊதியம் அதிகம், வேலை நிச்சயம் கிடைக்கும் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இங்கு வருகின்றனர். பெரும்பாலும் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்தே தொழிலாளர்கள் தமிழ்நாடு வருகிறார்கள். தினசரி வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களைப் பார்த்தாலே நமக்கு இது புரியும். தமிழ்நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் கல்லூரி படிப்பு வரை படிப்பதால்.. கட்டிடம் கட்டும் வேலைகள், ஹோட்டல் ஊழியர்களுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. இதனால் இயல்பாகவே இந்த பணியிடங்களை நிரப்ப நமக்கு வடமாநில தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். எப்படி நமது இளைஞர்கள் சிங்கப்பூர், சவுதி நாடுகளுக்குச் செல்கிறார்களோ அதேபோலத் தான் இதுவும்.. ஆனால், வடமாநிலத்தவர் குறித்து தொடர்ச்சியாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் காரணமாகத் தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாகவும் அரசியல் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இதுபோன்ற வேலைகளில் பணிபுரியத் தமிழக இளைஞர்கள் ஆர்வம் இல்லாததாலேயே வடமாநிலத்தவரை அழைத்து வருவதாக வணிகர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். வேறு இடங்களில் நடந்தவை, பழைய சம்பவங்களை அவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். இவை பொய்யான வீடியோக்கள் என்றும் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் தமிழ்நாட்டில் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், வடமாநிலங்களில் இந்த வீடியோக்கள் தீயாகப் பரவியது. குறிப்பாகப் பீகார் சட்டசபையிலும் கூட இந்தச் சம்பவம் எதிரொலித்தது. இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் அங்குள்ள பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பீகார் புலம்பெய்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கத் தனியாக ஒரு குழுவைத் தமிழ்நாடு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், பீகார் சட்டசபையில் சில பாஜக எம்எல்ஏக்கள் செய்தியாளர்கள் அமரும் நாற்காலிகள் மீதும் ஏறி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் வெளிநடப்பும் செய்தனர். இதைச் சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி கண்டித்தார். மேலும் சபாநாயகர் கூறுகையில், “பாஜக தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் ஈட்ட முயல்கிறது. சட்டசபை கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தேவையான ஆலோசனையை வழங்கலாம்” என்றார்.

அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி பேசுகையில், “தமிழ்நாடு முதல்வரின் தனிப்பட்ட அழைப்பை அடுத்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு சென்றதில் தான் அவர்களுக்குப் பிரச்சினை. அதற்காகவே இப்போது தேவையில்லாத பிரச்சினைகளைச் செய்து வருகின்றனர். புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைச் செய்திகள் உண்மையாக இருந்தாலும், இரு மாநில உயரதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை நிச்சயம் எடுப்பார்கள்” என்றார்.

அப்போது சட்டசபையில் இருந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இது குறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி பீகாரில் இருக்கும் சிலர் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகத் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் முற்றிலும் பொய்யான ஒன்று. இந்த விவகாரத்தில் இரண்டு வீடியோக்களை பரப்புகின்றனர். இரண்டுமே பொய்யான வீடியோக்கள். புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பொய்யான கட்டமைப்பை உருவாக்கவே இதை செய்துள்ளனர். போலியான வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை. அவர்கள் எதற்காக இப்படி தொடர்ச்சியாக பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டும். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் கூட எங்கள் அரசும், தமிழக அரசும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.