பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் இப்போது தான் தெரிகிறது: குமாரசாமி

பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கிய விவகாரத்தில் இந்த பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் என்ன என்பது இப்போது தான் தெரிகிறது என்று குமாரசாமி கூறினார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஹாசன் மாவட்ட அரசியல் குறித்து நான் பேசவில்லை. இந்த விவகாரத்தை ரேவண்ணாவிடம் விட்டுள்ளேன். கட்சிக்காக உழைத்தவர்களை நான் எப்போதும் கைவிட்டது இல்லை. பொறுமை மிக முக்கியம். எங்கள் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். அதில் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். 60 தொகுதிகளுக்கு 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுவோம். கடூரில் ஒய்.எஸ்.வி. தத்தாவுக்கு டிக்கெட் வழங்கினோம். அந்த தொகுதியில் கட்சிக்காக உழைத்த நிர்வாகிளை நாங்கள் தவிர்த்தோம். ஆனால் தத்தா நன்றி மறந்து காங்கிரசில் சேர்ந்துள்ளார்.

பா.ஜனதாவைச் சேர்ந்த மாடாள் விருபாக்ஷப்பாவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்தில் ரூ.8 கோடி சிக்கியுள்ளது. இப்போது தான் 40 சதவீத கமிஷனின் ஆழம் என்னவென்று தெரிகிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் ரூ.40 கோடி, ரூ.50 கோடி பணம் வைத்துள்ளனர். இது பாவத்தின் பணம். கொள்ளையடித்த இந்த பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காஙகிரசாரும் முன்பு இதே போல் கொள்ளையடித்து அந்த பணத்தில் தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளனர். எங்களிடம் பணம் இல்லை. தேர்தல் வரும்போது சிலர் நன்கொடை கொடுக்கிறார்கள். இதற்கு கடிவாளம் போட பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு குமாரசாமி கூறினார்.