15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடந்த 15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரம்மி என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வருகை அதிகரிக்க, விளம்பரங்களில் நடித்த நடிகர்களின் பேச்சை கேட்டு கோடிக்கணக்கான மக்கள் அதை நம்பி விளையாட தொடங்கினார்கள். இதனால் ஆன்லைன் ரம்மியின் பயன்பாடு அதிகரித்தன. ஊரடங்கால் வேலையிழந்து வருமானம் இழந்து வாடிய மக்கள் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பதிவிறக்கம் செய்து விளையாடினார்கள். தொடக்கத்தில் சில ஆயிரம் பரிசுகளை பெற்றதால், லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடிய பலர் தோல்வியடைந்து பணத்தை இழந்தனர். இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளான அவர்கள், விரக்தியடைந்து அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். காவல்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், தனியார், அரசு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், குடும்ப தலைவிகள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அவசர தடை விதிக்கும் சட்டத்தை திமுக அரசு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமலேயே கடந்த நவம்பர் மாதம் இந்த சட்டம் காலாவதியானது. மீண்டும் இந்த தடை சட்டம் எப்போது கொண்டு வரப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இதனால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 40 ஐ தாண்டி இருக்கிறது. மாதம் இருவராவது இதனால் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில்தான் இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்து உள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:-

சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வினோத்குமார் அவரிடம் இருந்த பணம் முழுவதையும் ஆன்லைனில் சூதாடி இழந்துள்ளார். கடன் வழங்கும் செயலிகள் மூலமாகவும் கடன் வாங்கி சூதாடியுள்ளார். சூதாடுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 44-ஆவது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழ்நாடு அரசு விளக்கி உள்ளது. இனியும் தாமதிக்காமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.