பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்!

கர்நாடகாவில் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது என்று கூறினார்.

கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டே மாதங்கள் இருப்பதால், மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடுத்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. இத்தகைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடகா சட்டப்பேர்வை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறது.

இந்தநிலையில் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஊழலை ஒழிப்போம் என்றார். ஏற்கனவே பாஜக ஆட்சியில் 40 சதவிகித கமிசன் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளநிலையில், ஊழல் செய்து ஒப்பந்ததாரரிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக எம்எல்ஏவின் மகன் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து பாஜக ஊழலை ஒழித்த லட்சணம் என எதிர்கட்சிகள் அந்த வீடியோ பதிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மாநிலத்தில் முதல் முறையாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகாவுக்கு வந்து, மாநிலத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போது, மாநிலத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சி இருப்பதை யாரோ அவருக்கு நினைவூட்ட மறந்துவிட்டனர். கடந்த நான்காண்டுகளில் ஊழலை ஏன் உங்களால் ஒழிக்க முடியவில்லை என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

தாவாங்கேரியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வும், அவரது மகனும் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும், அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக அரசியல் பழிவாங்களுக்காக எங்கள் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் உள்ள அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் என்று மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் பாஜக என இரட்டை என்ஜின் அரசாங்கம் என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது. எனவே ஊழல் இல்லாத புதிய அரசாங்க இயந்திரம் நமக்கு தேவைப்படுகிறது. கர்நாடகாவை மாற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நாங்கள் உறுதியான நேர்மையானவர்கள். ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம். இலவச மின்சாரம் தருவோம், நல்ல அரசுப் பள்ளிகளை உருவாக்குவோம், தரமான கல்வியை வழங்குவோம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.