சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்ததாக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலின் நிர்வாகி ஹரீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது போலி டாக்டர் பட்டம் என சர்ச்சை எழுந்த நிலையில் இந்த டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என துணைவேந்தர் வேல்ராஜ் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு சட்டவிரோதமாக டாக்டர் பட்டத்தை வழங்கியதாக ஹரீஷ் மீது அண்ணா பல்கலைக்கழகம் புகார் அளித்தது. அதன்பேரில் போலீசார் ஹரீஷை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு ஹரீஷ் விண்ணப்பித்திருந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் ஆம்பூரில் பதுங்கியிருந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த இடைத்தரகர் சுப்பையாவும் கைது செய்யப்பட்டார்.