கடலூரில் உள்ள விவசாயிகளை அழைத்துச் சென்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வட மாநில தொழிளர்கள் விவகாரத்தில் சில வாட்ஸ் அப் தளங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. இது பற்றி நானும் விசாரித்தேன், அது போன்று சம்பவம் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழ்நாடு வளர்ச்சிக்கு, அனைவரும் தேவை. ஆனால் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் , அதற்கான ஒப்புதலை முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும். முதல்வர் ரத்து என்று அறிவிப்பை செய்யவில்லை என்றால், கடலூரில் உள்ள விவசாயிகளை அழைத்துச் சென்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவேன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. தமிழ்நாட்டுக்கு இது ஒரு அவமானம், தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது. இடைத்தேர்தல் என்பதே தேவையில்லை என்பது எனது நிலைப்பாடு, ஈரோடு இடைத்தேர்தல்லில் வெற்றி பெறவில்லை, அதை பணம் கொடுத்து வங்கியுள்ளார்கள்.
காலநிலை மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் நேற்றுக் கூட ஒருவர் இறந்துள்ளார். ஆளுநரிடம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடிதம் அளிக்கப்பட்டு 115 நாட்கள் ஆகிறது. இந்த 115 நாட்களில் 16 நபர்கள் இறந்துள்ளார்கள், அதற்கு ஆளுநர் ராவி தான் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.