எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்!

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி 8 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, விசாரணை அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதாக நீண்ட காலமாகவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை விவகாரத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்க்கட்சிகள், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகிய 8 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில், எதிர்க்கட்சிகள் கூறியிருப்பதாவது:-

இந்தியா ஜனநாயக நாடு என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை முறைகேடாக கண்மூடித்தனமாக பயன்படுத்துவது நாம் ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்திற்கு மாறிவிட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் விசாரணை அமைப்புகளால் சோதனை நடத்தப்படுவது, வழக்குப்பதிவு செய்யப்படுவது போன்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களாகத்தான் உள்ளனர்.

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து விட்டால் அவர்களுக்கு எதிரான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை மந்தமாகி விடுகிறது. ஹிமந்த பிஸ்வ சர்மா மீது 2014 ஆம் ஆண்டு சாரதா சிட்பண்டு வழக்கில் சிபிஐ, அமலாகக்த்துறை விசாரணை நடத்தியது. ஆனால், ஹிமந்த பிஸ்வ சர்மா பாஜகவில் இணைந்த பிறகு அந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்த பிறகு சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கிலும் முன்னேற்றம் இல்லை. இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக போர் தொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில அரசுகளில் ஆளுநர்களின் தலையீடு அதிகமாக உள்ளது” உள்பட பல குற்றச்சாட்டுகள் இந்த கடிதத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 8 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக எழுதியிருக்கும் இந்த கடிதத்தில் காங்கிரஸ் கையெழுத்திடவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த கடிதத்தில் கையெழுத்திடாதது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.