அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
இந்தியாவுக்கு வழிகாட்ட கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. 1962ம் ஆண்டு அண்ணா, திராவிட நாடு கொள்கையை ஒத்தி வைக்கிறேன் என்று கூறிய பிறகு, திமுகவை அகில இந்திய அளவில் திமுக தலைவர் கருணாநிதி கொண்டு சென்றார். இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய மாநிலமாகவும், குடியரசு தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை நிர்ணயிக்கும் மாநிலமாகவும் தமிழகம் இருந்தது. இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலை முதலில் தமிழக அரசியல் வரலாற்றை படித்து பார்த்து விட்டு பேச வேண்டும்.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். அவருடைய ஆட்சியில் வட இந்தியர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று பீகார் துணை முதல்வர் தேஜாஸ்ரீ யாதவ் கூறியுள்ளார். ஈரோடு தேர்தல் வெற்றியை திசை திருப்புவதற்கு சில குள்ள நரிகள் இந்த பிரச்னைகளை கிளப்பி விட்டுள்ளனர். இதுபோன்ற குள்ள நரிகளை திமுக பார்த்து விரட்டியுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது. அவசர கோலத்தில் வழக்குகள் போடப்பட்டால் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்காது. 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை கிடைத்தது. தற்போது தான் காவல்துறையினர் இந்த வழக்குகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாஜி அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது வழக்குகள் மீது ஒவ்வொன்றாக நடவடிக்கை எடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.