நாம் எதிர்க்க வேண்டியது தொழிலாளர்களை அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைதான்: திருமாவளவன்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் நாம் எதிர்க்க வேண்டியது தொழிலாளர்களை அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டை சேர்ந்த உள்ளூர் மக்கள் கடுமையான தாக்குதல் தொடுத்திருப்பதாக இரண்டு வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக, இந்த வீடியோவை ஆதாரமாக காட்டி பீகார் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த வீடியோ போலியானது என தமிழ்நாடு காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த வீடியோக்களை தவறாக சித்தரித்த உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் இந்தி மொழியில் இந்த வதந்தி குறித்து விளக்கமளித்து வருகின்றனர். இருப்பினும் ரயில் நிலையங்களில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்து வந்தனர். இதனை சுட்டிக்காட்டி சிலர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது” என்று கூறி வருகின்றனர். ஆனால் அவர்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்த போது, “நாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த மாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். எங்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. பண்டிகை முடிந்தவுடன் ஊர் திரும்பிவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் பேரவை தலைவர் சந்திரபோஸின் படத்திறப்பு விழாவில் பங்கேற்றிருந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், வட இந்தியர்கள் ‘முதலீடுகள்’ மூலமாக தமிழ்நாட்டிற்குள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதை எதிர்ப்பதற்கு பதில் கூலி வேலைக்கு வரும் வட இந்தியர்களை அடித்து விரட்டுபவர்கள் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது. பிரதமருக்கு எதிராக உழைக்கும் மக்களின் இடையே முரண்பாட்டையும் மோதலையும் உருவாக்குவது சரியல்ல. வேலையின்மை காரணமாகதான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் எனில் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க தவறியது பிரதமர் நரேந்திர மோடிதான். எனவே வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக போராடுவதை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராடுவதுதான் சரியானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.