குஜராத், அந்தமானில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது!

நாட்டில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

துருக்கி, சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 50,000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர். பல லட்சக்கணக்கானோர் பேரிழப்பை எதிர்கொண்டனர். இதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன. தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என். பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை, நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணமானவை கண்டத் தட்டுகள் நகருதல்தான். இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்டானிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் இடையே பெரும் இடைவெளி உருவாகி கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்ட்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தர்காசியில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று காலை அந்தமான் நிக்கோபர் தீவுகள், குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சற்று சக்திவாய்ந்ததாக நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 அலகுகளாகப் பதிவானது. குஜராத்தில் அரபிக் கடலை ஒட்டிய துவாரகா புனித நகரமும் இன்று காலையில் நிலநடுக்கத்தால் குலுங்கியது. குஜராத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.