தமிழகத்தில் வட மாநிலத்தவர் பாதுகாப்பாக உள்ளனர்: நாராயணசாமி

வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் என்று பொய்யான தகவல்கள் சில நாட்களாகப் பரவி வந்தது. இது தமிழ்நாட்டில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக மற்றும் பீகார் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ச்சியாக உண்மைக்கு மாறான வதந்திகளைப் பரப்பும் கட்சியாகவே பாஜக இருந்து வருகிறது. வட மாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பொய்யான தகவல்களைப் பரப்பி தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயல்கிறது. இது முழுக்க முழுக்க பொய்யான பரப்புரை என்பது இப்போது உறுதியாகியுள்ளது. வட மாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டில் உரியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை அம்மாநில முதல்வரும் உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பொய்யான தவறான செய்திகளைப் பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார். பொறுப்புள்ள கட்சியின் தலைவரே இப்படிப் பேசியுள்ளது மிகவும் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இதன் மூலம் அண்ணாமலை அரைவேக்காடு அரசியல்வாதி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. பொய் புரட்டை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. பொய்யை மட்டும் மூலதனமாகக் கொண்டு செயல்படும் பாஜகவின் வேலை தமிழ்நாடு, புதுவை மக்களிடம் பலிக்காது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் நிச்சயம் சவுக்கடி கொடுப்பார்கள்.

ஆளுநர்கள் இன்னும் ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்துகின்றனர். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுநர்கள் தலையிடவோ தடை போடவே கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இன்னும் ஆளுநர்களும் துணைநிலை ஆளுநர்களும் திருந்தவில்லை. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானாவிலும் ஆளுநராக உள்ளார். இங்கு நடந்துவதை போல தெலங்கானாவிலும் அவரால் மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்த முடியுமா எனச் சவால் விட்டேன்.. அதற்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. தெம்பு திராணி இல்லாத புதுச்சேரியில் தான் அவர் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். தனது அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுகின்றார் என்று ரங்கசாமி பார்க்கவில்லை.. முதல்வர் நாற்காலி மட்டும் போதும் என்று.. அதிகாரத்தை விட்டுக்கொடுத்து டம்மி முதல்வராக ரங்கசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் குறை கேட்புக் கூட்டத்தை நடத்துவதால் எந்தவொரு பலனும் இல்லை. ஆளுநர்கள் வரம்பு மீறிச் செயல்படக் கூடாது.

புதுச்சேரி முழுக்க சாராய கடைகள் திறந்துள்ளனர். இப்போது காலையில் நீங்கள் போலீசாரிடம் 20 லட்சம் கொடுத்தால் ரெஸ்டோ பார் நடத்த மாலை அனுமதி கிடைத்துவிடும். அந்தளவுக்குத் தான் இருக்கிறது. புதுவையில் முன்பு 400 பார்கள் இருந்த நிலையில், இப்போது 900 பார்கள் உள்ளனர். ரெஸ்டோ பாரில் நடன நிகழ்ச்சி என்று கூறி எதையோ நடத்தி கலாச்சாரத்தைச் சீரழிக்கிறார்கள். வருமானத்திற்காக பார்களுக்கு அனுமதி தருவதாகப் புதுச்சேரி முதல்வர் சொல்கிறார். அரசுக்கு வருமானம் வேண்டும் எனச் செய்கிறாரா.. இல்லை தனிப்பட்ட வருமானத்தை அதிகரிக்கச் செய்கிறாரா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.