தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அகழாய்வு பொருட்களுடன் கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் இதுவரை 8 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. கீழடி அருங்காட்சியகம் முழுவீச்சில் நடைபெற்ற இந்த அகழாய்வு பணியின் மூலமாக பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த தொல்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவை சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரியவந்தது. இதுகுறித்து தமிழக அரசு அதிகாரபூர்வமாகவும் அறிவித்தது. தமிழர்களின் பழங்கால நாகரிகம் பற்றி உலகுக்கு எடுத்துக்கூறும் சான்றாவணமாக அகழாய்வு பொருட்கள் விளங்குகின்றன. அவை ஒவ்வொன்றையும் பொதுமக்கள் பார்வையிட்டு, அதுபற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில், அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும், அதையும் கீழடியிலேயே அமைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த பணிகளை விரைவாகவும், அதே நேரத்தில் மிகவும் நுட்பமாகவும் கட்டி முடிப்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தினார். அவர், முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்பு மதுரை வந்தபோது எல்லாம், கீழடி அருங்காட்சியக பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். முழுக்க முழுக்க செட்டிநாடு கட்டிடக்கலையை பயன்படுத்தி நேர்த்தியாக அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் கடந்த சில மாதங்களாக அதன் உள்புற வடிவமைப்பு சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெற்றன. கூடவே அகழாய்வு தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் பணியும் நடைபெற்று வந்தது. ரூ.18 கோடியே 43 லட்சம் செலவில், கீழடி அருங்காட்சியக பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மார்ச் 5-ந் தேதி (நேற்று) திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த சில நாட்களாக திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இரவில் அந்த வளாகம் ஜொலிக்கும் வகையில் மின்னொளி அலங்காரமும் செய்யப்பட்டது.
மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு செய்து வரும் நிலையில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பகல் 11 மணி அளவில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து மதுரை கலெக்டர் அலுவலகம் வந்த அவர், 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசினார். மாலையில், 5 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்று சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக அறிவுரை வழங்கினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு கீழடிக்கு சென்றார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவர் கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார்.
பின்னர் அங்கு தனித்தனியாக ஒவ்வொரு அறைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அந்தந்த தொல்பொருட்களுக்கான சிறப்புகள் குறித்து, தொல்லியல் துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர். மேலும் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் கீழடி அகழாய்வு குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இந்த குறும்படத்தையும் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அதன் பின்னர் உலோக பொருட்களுக்கான காட்சிக்கூடம், சுடுமண் பொருட்களுக்கான காட்சிக்கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும், அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்பொருட்களையும் பார்வையிட்டார். பழங்கால மண்பாண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கிற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்பொருட்களுடன் ‘செல்பி’ எடுத்து உற்சாகம் அடைந்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்ட வரைபடங்கள், தகவல் பலகை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பெரிய முற்றம், தெப்பக்குளம், கல்மண்டபம், ஓட்டுக்கூரை குடில்கள், பார்வையாளர்கள் அமரும் இடம், கீழடி அகழாய்வு மாதிரி குழிகளையும் அவர் பார்வையிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கீழடி அருங்காட்சியகத்தில் இருந்தார். இரவு 8.15 மணி அளவில் வெளியே வந்தார். அப்போது, அங்கு திரண்டு இருந்த மக்கள், தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அவரும், பதிலுக்கு அவர்களை நோக்கி கை அசைத்து உற்சாகப்படுத்தினார். பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் மதுரை புறப்பட்டார்.
சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்க காய்கள், சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன. அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது. பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.
குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கீழடி கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிபடுத்துவதற்கான அருங்காட்சியத்தை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், ‘‘மனிதகுலத்தின் தொல்நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை இன்று நான் பெற்றேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக ஆக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடு அரசு. ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது. வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம்!’’ என்று அவர் கூறியுள்ளார்.