கோவையில் கடந்த வருடம் நடந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டு உள்ளது.
கடந்த வருடம் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாதம், கோயம்புத்தூரில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தேசிய அளவில் இந்த வெடிப்பு பல்வேறு விவாதங்களை, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்தது. முதலில் தமிழ்நாடு போலீசார் இதைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தற்போது என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் உபா சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கில் தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து கோவையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக குண்டுவெடிப்பிற்கு காரணமான, மறைந்த முபின் வீட்டிற்கு சென்று போலீசார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் அங்கிருந்து பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர். அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் கைப்பற்றினர். அங்கு விசாரணை நடத்திய பின் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் விசாரணை நடத்தினர் . அதன்பின் பாலக்காடு உள்ளிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கருதப்படும் இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் அங்கு மப்டியில் இருந்து மக்களோடு மக்களாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முபினின் நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிலிண்டர் குண்டை தயாரிக்க இவர்கள்தான் முபினுக்கு உதவி செய்துள்ளனர் என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கிளை அமைப்பான Islamic State Khorasan Province அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு உள்ளது. அந்த அமைப்பின் அதிகாரபூர்வ இணைய பக்கமான Voice of Khurasan நாங்கள்தான் தாக்குதலை நடத்தினோம் என்று ஒப்புக்கொண்டு உள்ளது. கோவை மட்டுமின்றி கடந்த வருடம் மங்களூரில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதே போல் இன்னும் பல தாக்குதல்களை நடத்துவோம் என்றும் இவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதற்காக 68 பக்கத்திற்கான ரிப்போர்ட்டை அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்திய அரசின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கை சகிக்க முடியாத எல்லையை எட்டியிருப்பதாகவும், இதனால்தான் நாங்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறோம், என்று தெரிவித்து உள்ளனர். அவர்களின் இந்த ரிப்போர்ட் காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.