காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான்: வானதி சீனிவாசன்!

கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த உடன் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது:-

முதலமைச்சரின் அமைச்சரவையைச் சார்ந்தவர்களே பல்வேறு சமயங்களில் வட மாநில தொழிலாளர்கள் பற்றியும் அவர்கள் செய்யும் வேலைகள் பற்றியும் கேவலமாகவும், நியாயம் கற்பிக்கின்ற வகையிலும் நடந்து கொள்வதாக பேசியுள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சர் முளையிலேயே கிள்ளி எரிந்திருந்தால், இதுபோன்ற சூழல் வந்திருக்காது என்றார்.

பாஜகவில் இருந்து விலகி பலர் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு, மாற்றுக் கட்சிகளில் இருந்தும் தங்களது கட்சிக்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கலாம். இல்லையெனில் வேறு ஏதேனும் விருப்பம் இருந்திருக்கலாம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பாஜகவிற்கு எந்தவித பாதிப்பும் வரப் போவதில்லை. எங்களுடைய கட்சி அதிகப்படியான புதிய நபர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.

பிரதமரை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியது பற்றிய கேள்விக்கு, ஒரு தேர்வு நடைபெறுகிறது என்றால் அந்த தேர்வுக்கு தயாராகி இருப்பவர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் குறைந்த அளவில் பங்கேற்பது குறித்து பிரதமரிடம் புகார் சொல்லி என்ன செய்வது? ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வுகளில் பங்கேற்கக் கூடிய மாணவர்களை மாநில அரசு தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதையெல்லாம் விட்டு விட்டு தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை தாருங்கள் எனக் கேட்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? போட்டி தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களை தயார்படுத்தி அவர்களுக்கு உதவி செய்து, அதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள தயார் செய்ய வேண்டும் என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு செல்வதாக கூறி வரும் நிலையில், தேசிய அரசியலில் ஏ டீம், பி டீம் என பல்வேறு டீம்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அங்கு செல்வதாக கூறினால் மட்டும் போதாது. தேசிய அரசியல் தலைவர்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொள்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையாக முதலில் தேசியத்தை நீங்கள் நம்புகிறீர்களா? தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்? என்பதை முதலில் செய்து காட்டுங்கள். அதன்பிறகு தேசிய அரசியலுக்கு வாருங்கள். திமுக அமைச்சர்கள் கல்லெடுத்து எறிகிறார்கள். பெண்களை இழிவாக பேசுகிறார்கள். ஓட்டு போடுகிற மக்களை கேவலப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் எஜமானர்கள் என நினைத்துக் கொள்கின்றனர். ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் அடிமைகள் போல நடத்துகின்றனர். ஆனால் சுயமரியாதை என பேசிக் கொண்டு காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே இவர்கள் தான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.