பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்: சவுமியா அன்புமணி

பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் “பெண்களின் ஆரோக்கியம்” குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-

பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணிகள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள். இந்த வேதனையை போக்குவதற்காக தான் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதனை எனது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோது தொடங்கி வைத்தார். இப்போது கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் 108 ஆம்புலன்சை அழைத்தால் உடனே வருகிறார்கள். இதனால் பிரசவங்கள் எளிதாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மரண விகிதம் குறைந்துள்ளது.

கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து தைரியமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும். மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.

எனக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கறாங்க.. நான் எந்த பெண்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு சென்று பேசினாலும், தவறாமல் சொல்வது ஒரு விஷயம்தான்.. பிளாக்மெயில் விஷயத்துக்கு மட்டும் தயவுசெய்து பயப்படவே பயப்படாதீங்க.. யாராவது உங்களுடைய நிர்வாண போட்டோக்களையோ, அல்லது உங்களை பற்றி ஏதாவது அசிங்கமான விஷயத்தையோ, வெளிப்படுத்தினாலும், பயப்படாதீங்க.. “லவ் டுடே” படத்துல கூட காண்பிக்கிறாங்களே ஃபேக் வீடியோ, அதுமாதிரி உங்களை பற்றி உண்மையாகவே வந்தாலும்சரி, பயப்படாதீங்க.. சோஷியல் மீடியாவிலோ அல்லது எந்த சமூகவலைதளங்களிலும், இதெல்லாம் 10 நாள், 20 இருக்கும்.. அதுக்கப்பறம் வேற வீடியோ வந்துடும்.. இதையெல்லாம் அதை மறந்துடுவாங்க.. நீங்க எதுவானாலும் உங்க அம்மா கிட்ட சொல்லுங்க. உண்மையில் அதுதான் ரொம்ப நல்லது.. அம்மா திட்டினாலும், அடி வாங்கிக்குங்க.. யார்கிட்டயோ போயி வதைப்படறதைவிட, அம்மா கிட்ட திட்டு வாங்கிறது தப்பே கிடையாது.

யார் வேணும்னாலும் உங்களை ஜட்ஜ் பண்ணுவாங்க. “அவள் நடுராத்திரி போனாள், அவள் சரியாகவே டிரஸ் பண்ண மாட்டாள்” இப்படி எல்லாரும் ஜட்ஜ் பண்ணுவாங்க. கவலைப்படாதீங்க. தப்பே நடந்துவிட்டது அல்லது தவறாக உங்களை யாரோ சித்தரித்து விட்டார்கள் என்றாலும்கூட பயப்படாதீங்க.. அம்மா கிட்ட போய் முதலில் சொல்லுங்க. வெளியில் யார்கிட்டயும் போய் மாட்டிக்காதீங்க.. இது என்னுடைய முக்கியமான வேண்டுகோள். இதை உங்களிடம் முன்வைக்கிறேன். ஏனென்றால், இதனால்தான் நிறைய பெண்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். போன் கையில் வைத்துக் கொண்டாலும்கூட, ஜாக்கரதையா இருங்க.. உங்களை சுற்றியிருக்ககூடிய சூழ்நிலையை கவனித்து கொண்டே இருங்க.. அது ரொம்ப முக்கியம்.. அது உங்க மனநலனுக்கும் முக்கியம். ஏனென்றால், அனீமியா என்பது ரத்தக்குறைபாடு.. இரும்பு சத்து குறைய, குறைய சாயங்காலம் ஆனால் படுத்துவிடுவார்கள். அதனால், உங்க வீட்டில் அம்மா அதுபோல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை முதலில் கவனித்து பாருங்கள். பிளட் டெஸ்ட் எடுங்க.

இப்போவெல்லாம் ஹீமோகுளோபின் லெவல் 10ஐ தாண்டுவது கிடையாது.. 9 என்ற அளவிலேயே உள்ளது.. 9 எண்ணிக்கையில் இருந்தால் அது டேஞ்சர்.. அதனால், வீட்டில் உள்ள பெண்கள், சத்தான உணவை சாப்பிடுவது ரொம்ப அவசியம். அப்போதுதான், உடல்நலம் பேண முடியும்.. மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.. பெண்கள் நன்றாக இருந்தால்தான், அந்த குடும்பமே நல்லா இருக்கும். பாலியல் கொடுமை, பிளாக்மெயிலிங், ஈவ்டீசிங் இப்படிப்பட்ட தொந்தரவுகளால் மனநல பாதிப்புகள் ஏற்படும். செக்யூரிட்டி + சேப்ட்டி இந்த பாதிப்புகளை கண்டுபிடிக்க, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உடன்பிறந்தவர்கள், சுகாதாரத்துறை, காவல்துறை, நீதித்துறை, இவர்களுக்கெல்லாம் பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகளை முதலில் அடையாளம் காண வேண்டும். அப்படி அடையாளம் கண்டுகொண்டால்தான், அவர்களுக்கு உடல்ரீதியான உடனடி பாதுகாப்போ, மனரீதியான பாதுகாப்போ நம்மால் அளிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.