தமிழ்நாட்டில் சாதி கலவரம், மத கலவரத்தை தூண்ட சதி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 6.5 அடி உயர பீடத்தில், 8.5 அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கலைஞரின் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலூர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பெரியசாமி, மனோ தங்கராஜ் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சிலை திறப்புவிழாவிற்கு பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிலர் நம்மீது புழுதிவாரி தூற்றிக்கொண்டிருக்கின்றனர். திராவிட மாடல் என்று சொல்லி மக்களை கவரக்கூடிய வகையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்களே.. தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்ன ஆவது?என்ற நிலையிலே நம்மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். இந்த ஆட்சியை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்காவது சாதி கலவரத்தையோ, மத கலவரத்தையோ ஏற்படுத்தலாமா? மக்களிடையே பிளவுபடுத்தலாமா என்று திட்டமிட்டு காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நம்மீது சொல்லப்படுகின்ற தேவையற்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. சிலர் தங்களை விளம்பரப்படுத்த அவ்வாறு சொல்கிறார்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வென்று காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது. நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக கூட்டணி கட்சியினர் தங்களின் ஈகோவை விடுத்து ஒன்றாக இணைந்து வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி சிறப்பாக இருக்கிறது. நாட்டைக்காப்பாற்ற எதிர்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்ற முடியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.