‛‛பலாத்காரம் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்களை வரவேற்பது இந்த மதவெறியர்களுக்கு வழக்கமாகிவிட்டது. மக்களே உங்களால் தான் பாஜகவுக்கு பாடம் புகட்ட முடியும்” என நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனம்(கேஎஸ்டிஎல்) உள்ளது. இதன் தலைவராக தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா இருந்தார். இந்நிலையில் தான் மூலப்பொருள் தொடர்பான டெண்டர் வழங்க மதல் விருபாக்சப்பா சார்பில் ஒப்பந்ததாரரிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நபர் மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மதலிடம் ரூ.40 லட்சம் லஞ்சமாக கொடுத்தார். பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைமை கணக்காளராக பணியாற்றி வந்த பிரசாந்த் மதலை லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.7.70 கோடி பறிமுதலானது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதில் மதல் விருபாக்சப்பா தான் முக்கிய குற்றவாளி என்ற குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர். முதல் குற்றவாளியாக மதல் விருபாக்சாப்பா சேர்க்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதல் விருபாக்சப்பா கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெடன் நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பாவிடமும் லோக்ஆயுக்தா விசாரிக்க சம்மன் வழங்கப்பட்டது. மேலும் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியானது. இதையடுத்து அவர் தலைமறைவானார். மேலும் அவரது சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மதல் விருபக்சப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் மதல் விருபாக்சப்பா காரில் சொந்த ஊர் திரும்பினார். இந்த வேளையில் அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து அவரை தொண்டர்கள் வரவேற்றனர். மேலும் விசிலடித்தும் அவரது கார் மீது பூக்களை தூவியும் வரவேற்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்த சம்பவத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் பாஜகவினரை கடுமையாக சாடி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். அதாவது பிரகாஷ் ராஜூவும் பாஜகவினரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்த கொள்ளையர்களுக்கு மக்களால் மட்டுமே பாடம் புகட்ட முடியும். பலாத்காரம் செய்பவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்களை வரவேற்பது இந்த மதவெறியர்களுக்கு வழக்கமாகிவிட்டது. அன்பான மக்களே இன்னும் எத்தனை காலம் தான் நாம் இதை பொறுத்துக் கொள்வோம். இதனை எதிர்த்து எப்போது குரல் எழுப்பி கண்டிப்போம்” என கேள்வி எழுப்பி உள்ளார்.