பெரியாருக்கு ‘பெரியார்’ என்று பெயர் சூட்டியவர்கள் பெண்கள்: முதல்வர் ஸ்டாலின்!

பெரியாருக்கு ‘பெரியார்’ என்று பெயர் சூட்டியவர்கள் பெண்கள் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ஆம் நாள் “உலக மகளிர் தினம்” கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச்-8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல; மனிதகுலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது. இப்போது எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம் தந்தை பெரியார் இல்லையே, இதைப் பார்ப்பதற்கு இல்லையே என்ற அந்தக் கவலைதான்.

இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த மகளிர் தின விழாவை பூரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த உலகில் எந்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள். மாநாடு நடத்தினால் பெண்கள் அதிகமாக பங்கெடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அழைத்தார். போராட்டம் நடந்தால் தனது மனைவி நாகம்மையாரையும் – தங்கை கண்ணம்மாவையும் அழைத்துச் சென்றார் பெரியார். இத்தகைய வீறுகொண்ட பெண்களைப் பார்த்துத்தான் ஏராளமான பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள். இன்னும் சொன்னால், தந்தை பெரியார் அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தைத் தந்தது யார் என்று கேட்டீர்களென்றால், பெண்கள் தான். வடசென்னை பகுதியில் இருக்கின்ற ஒற்றைவாடி கலையரங்கத்தில் தான் அந்த விழாவை நடத்தி பெண்கள் தான் தந்தை பெரியாருக்கு ‘பெரியார்’ என்ற அந்தப் பட்டத்தை கொடுத்தார்கள். அது வரையில் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்தான் என்று சொன்னார்கள். 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அது வழங்கப்பட்டது. அதனுடைய 50-ஆம் ஆண்டில்தான், பெரியாருடைய கனவை நனவாக்கக்கூடிய வகையிலே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கிய தலைவர் தான் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.