வடமாநிலத்தவர் குறித்து அவதி பரப்புவது பாஜகவின் தந்திரங்களில் ஒன்று. தான் மட்டுமே ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார் என்று திருமாவளவன் கூறினார்.
தோள்சீலை போராட்டத்தின் 200ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிறுத்துவதில் குறியாக உள்ளார். தமிழ்நாடு அரசியலில் ஊடகங்கள் எப்போதும் தன்னை குறித்தே பேச வேண்டும் என்ற ஒரு வகையான மேனியா அவருக்கு இருப்பதை உணர முடிகிறது. அதனால் பரபரப்பாக எதையாவது பேச வேண்டும், அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்ப வேண்டும், தனிநபர் மீதான விமர்சனங்களை கடுமையாக முன்வைக்க வேண்டும் எனும் யுத்திகளை அவர் கையாண்டு வருகிறார். அவர் மிகவும் சாதுரியமானவர் என தன்னை காட்ட முயற்சிக்கிறார். வட இந்திய தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதை அவர் தெரியாமல் செய்ததல்ல, திட்டமிட்டே அவதூறை பரப்பியுள்ளார்.
முடிந்தால் என் மீது கை வைத்து பாருங்கள் என, தன் மீதான வழக்கு குறித்து அண்ணாமலை கூறியிருப்பது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. எதிர்மறையான சவால் விடுத்து பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது போன்ற தன்மைகள் அவரது முதிர்ச்சியின்மை மற்றும் பக்குவமின்மையை காட்டுகிறது. தன்னைச் சுற்றியே ஊடக வெளிச்சம் இருக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.
ஏற்கனவே, அண்ணாமலை ராணுவ வீரர்களுக்கு சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்ட போதே அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். தற்போது வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்ததோடு நிறுத்தி விடாமல், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட இந்திய தொழிலாளர்கள் மீதான அவதூறு பரப்புதல் என்பது பாஜகவின் செயல் தந்திரங்களில் ஒன்று. ஏற்கனவே வட இந்தியாவில் இது போன்று தான் அவதூறுகள் பரப்பி, சமூக பதற்றங்களை உருவாக்கி வன்முறைகளுக்கு வித்திட்டு வருகிறார்கள். அதே முறையை தமிழகத்தில் அண்ணாமலை கையாளுகிறார். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் அண்ணாமலை, கட்சிக்குள் இருக்கும் அடுத்த நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைக்க வேண்டும், அவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது, ஊடக வெளிச்சத்திற்கு வந்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை கவனமாக இருக்கிறார். ஆகவே, தான் பலர் பாஜகவை விட்டு வெளியேறியுள்ளனர். வெளியேறியவர்கள் பாஜகவுக்கு எதிராக குற்றம் சாட்டாமல் அண்ணாமலை மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்ணாமலையின் அணுகுமுறையால் தமிழகத்தில் சமூக பதற்றம் அவ்வப்போது நிலவுகிறது. திமுக கூட்டணியை எந்த அவதூறுகளாலும் வதந்திகளாலும் சிக்கலுக்கு உள்ளாக்க முடியாது.
ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக மதிமுகவின் பங்கு மகத்தானது. தமிழகத்தைச் சார்ந்த ஒவ்வொரு தலைவர்களும் அவரவர் வலிமைக்கு ஏற்ப பங்காற்றியுள்ளனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாக சந்தித்து உரையாடிய போது, அவர் தமிழகத்தைச் சார்ந்த தலைவர்கள் குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். விடுதலை புலிகளும் எம்ஜிஆரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள். கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் ஒப்பிடும் போது விடுதலைப்புலிகள் எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்தார்கள். ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு, இந்தியாவில் இருந்து மத்திய அரசும் எல்லா கட்சிகளும் ஆதரிக்கவில்லை என்றால், விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களோடு வலிமை பெற்றிருக்க முடியாது. இந்திரா காந்தி அரசு தான் பல இயக்கங்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததோடு, ஆயுதங்களை அள்ளி அள்ளி கொடுத்தது. அவற்றில் ஒரு இயக்கமாக விடுதலை புலிகள் அமைப்பும் காணப்பட்டது. 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசியல் இரண்டு பிரிவுகள் ஆனது, ஒரு தரப்பு விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பு விடுதலை புலிகளுக்கு எதிராகவும் செயல்பட்டது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.