தான் அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். ஊழல் செய்துள்ளதாக வந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. கடந்த 3ஆம் தேதி சில நாளிதழ், மற்றும் தொலைக்காட்சிகளில் தங்கமணி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர். அதுகுறித்து விளக்கம் அளிக்கவே செய்தியாளர்களை சந்தித்துள்ளேன்.
இது தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு முழு விளக்கங்களை தெரிவித்துள்ளேன். 2000ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டு வர டெண்டர் விடப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் நீதிமன்றத்திற்கு சென்று தடையானை பெற்று 2019 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டன.
2016ஆம் ஆண்டு நான் மின்சாரத்துறை அமைச்சராக ஆன பிறகு நீதிமன்றம் சென்று விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வரும் டெண்டரை கேன்சல் செய்தோம். நான் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக தவறாக செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள். இது தொடர்பாக ஏற்கனவே நான் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளேன். கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டது 2001 – 2019 வரை என போடப்பட்டுள்ளது. அவர்கள் தெரிந்து போட்டார்களா, அல்லது தெரியாமல் போட்டார்களா? இது முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா என தெரியாது. ஏனென்றால் 2006 – 2011 வரை திமுக ஆட்சி. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக ஆற்காடு வீராசாமி இருந்தார். திமுக ஆட்சி இருந்ததை மறந்து விட்டு ஊழல் என லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா அல்லது முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா என எனக்கு தெரியவில்லை.
2011 – 2016 ஆம் ஆண்டு என்று தன் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதில் துளியும் உண்மையில்லை என்பதை மீண்டும் மறுப்பு தெரிவிக்கின்றேன். பொய் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். நீதிமன்றம் சென்று போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்த அவர் என் மீதான பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு. அது தொடர்பான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று கூறியதுடன் பேட்டியை முடித்து கொண்டார்.