ஓபிஎஸ் அணியின் செந்தில் முருகன் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகனும், இபிஎஸ் அணி சார்பாக கே.எஸ்.தென்னரசுவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் தென்னரசு போட்டியிட வழிவிட்டு ஓபிஎஸ் தனது வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற வைத்தார். கட்சிக்காக இக்கட்டான நேரத்தில் போட்டியிட முன்வந்து பின்னர் வாபஸ் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் செந்தில் முருகனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி அணிக்கு அவர் மாறக்கூடும் என்று செய்திகள் கசிந்தன. தற்போது மீண்டும் இது தொடர்பான தகவல் ஓபிஎஸ்ஸுக்கு சென்ற நிலையில் செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். ஓபிஎஸ்ஸின் நீக்க அறிவிப்பு வெளியான நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.