கேரள முதல்வரை அம்பலப்படுத்துவேன்: ஸ்வப்னா சுரேஷ்

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் மீது நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேரளாவில் கடந்த 2020இல் திருவனந்தபுரம் ஏர்போர்டில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் வந்த பார்சல்களில் சுமார் ரூ.13.82 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூதரக பெயர்களில் வந்த பார்சல்களில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில் கேரளா அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தங்கக் கடத்தல் தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமையினர், சுங்க இலாகா துறையினர், அமலாக்கத்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து இதில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு அவ்வப்போது அவர் பல பகிர் தகவல்களைக் கூறி வருகிறார். இதனிடையே கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஎம் தனக்கு 30 கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்ததாகவும் வழக்கை முடித்து விட்டு மாநிலத்தை விட்டு வெளியேறச் சொன்னதாகவும் ஸ்வப்னா சுரேஷ் பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் லைவில் பேசிய ஸ்வப்னா சுரேஷ், “சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்வி.கோவிந்தன் அனுப்பிய விஜய் பிள்ளை என்ற இடைத்தரகர் என்னைத் தொடர்பு கொண்டார். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைக்குமாறு கேட்டார். மேலும், முதல்வர் பினராஜி விஜயன் குறித்துப் பேசுவதை நிறுத்துமாறும் கூறினார்கள். நான் ஹரியானா அல்லது ஜெய்ப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்தையும் செய்து தருவதாகத் தெரிவித்தனர். மேலும், போலி பாஸ்போர்ட்கள் தயாரானதும் நாட்டை விட்டுச் செல்லவும் உதவுவதாகத் தெரிவித்தனர். முதலில் ஏதோ நேர்காணல் என்று சொல்லியே விஜய் பிள்ளை என்னைப் பெங்களூரில் ஒரு ஹோட்டலில் சந்திக்க வந்தார். அதன் பின்னரே இது குறித்தெல்லாம் விளக்கினார். பெருந்தொகை கொடுப்பதாகவும் தெரிவித்தார். இரண்டு நாட்களில் நல்ல முடிவை எடுக்க அவகாசம் தருவதாகக் கூறிய அவர், இல்லையெனில் என் வாழ்க்கையே ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

எனக்கு முதல்வர் பினராயி விஜயன் அல்லது அவரது குடும்பத்தினர் மீது தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை. அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்கும் விருப்பம் எனக்கு இல்லை. ஆனால், என் வாழ்க்கையை முடிந்துவிடும் என்று சிபிஎம் செயலாளர் கோவிந்தன் மிரட்டினார். என்னைத் தொடர்பு கொண்ட விஜய் பிள்ளையின் போன் நம்பர், மின்னஞ்சல் முகவரியை எனது வழக்கறிஞருக்கு அனுப்பியுள்ளேன்.. இந்த விவகாரத்தில் கடைசி வரை போராடப் போகிறேன் என்பதை இந்த பேஸ்புக் லைவ் வழியாக நான் முதல்வரிடம் சொல்ல விரும்புகிறேன். என்னை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். உங்கள் முழு வணிக சாம்ராஜ்யத்தையும் நான் அம்பலப்படுத்துவேன். என்னை அச்சுறுத்த நினைக்க வேண்டாம். பிறகு உங்கள் உண்மை முகத்தை உலகத்திற்கு அம்பலப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.