முதல்வர் பதவி ஆசையில் கட்சி தொடங்கிய பலரும் இன்று காணாமல் போய்விட்டார்கள்: மு.க.ஸ்டாலின்!

அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று கூறி கட்சித் தொடங்கிய சிலர் தமிழ்நாட்டில் காணாமல் போனதாக முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் 700 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் முதமலைச்சருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றார். இதனைத் தொடர்ந்து சின்னியம்பாளையத்தில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் திமுக இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக, அமமுக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கோவை செல்வராஜ் எப்படிப்பட்ட பேச்சாளர், எப்படிப்பட்ட செயல்வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் அதிமுகவில் இருந்த போது கோவை செல்வராஜ் தொலைக்காட்சியில் விவாதிக்கும் போது, பலமுறை பார்த்துள்ளேன். அவர் உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு, வெளியில் ஒன்று பேசக் கூடியவர் அல்ல. ஒரே போல் அனைத்து நேரங்களிலும் பேசக் கூடியவர். சில நேரங்களில் நம்மையும் திட்டி பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தாய் கழகத்தில் அவர் இணைந்தார். திமுக இயக்கம் இன்று அவரின் சீறிய முயற்சியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். அனைவரையும் வரவேற்க கடமைபட்டுள்ளேன்.

திமுகவை தாய் கழகம் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. திமுக தொடங்கிய போது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அண்ணா கட்சியை தொடங்கவில்லை. தமிழினத்துக்காக தொடங்கியதுதான் திமுக இயக்கம். மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திமுக. 1949ல் தொடங்கப்பட்ட திமுக, 1957ல் தான் தேர்தலில் களம் கண்டது. 1957ல் திமுக சார்பாக 15 பேர் சட்டப்பேரவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின்னர் 1967ல் திமுக ஆட்சியை பிடித்தது. இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி 1991ஆம் ஆட்சி மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பலர் காணாமல் போயினர்.

தற்போது திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு இன்று முதலே உழைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடை இன்றே களமிறங்குங்கள். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடும் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இன்றே தேர்தல் பணியில் களமிறங்குங்கள். சென்றமுறை 39 தொகுதிகளில் வென்றோம், இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.