இந்தியாவில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் பருவகால காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுரைகளுடன் கூடிய முக்கிய கடிதத்தை எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது எச்3என்2, எச்1என்1 வகை இன்ப்ளூயன்சா வைரசால் தான் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பால் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும், ஹரியானாவை சேர்ந்த ஒருவரும் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமீபத்தில் சுகாதாரத்துறை உறுப்பினர்கள், நிதிஆயோக் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்தது. இன்ப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பருவகாலங்களில் ஏற்படுவது இயல்பு தான். இதற்கு பருவநிலை மாறுபாடு முக்கிய காரணமாகும். இதுமட்டுமின்றி மக்களின் பழக்கவழக்கங்கள் காரணமாக உள்ளன. அதாவது முறையான சுகாதாரத்தை பின்பற்றாது, மக்களுடன் நெருக்கமாக இருப்பது உள்ளிட்டவற்றால் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் எச்3என்2 மற்றும் எச்1என்1 வகை இன்ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதுதொடர்பாக முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறுவர்கள், முதியவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இதனால் அத்தியாவசிய மருந்து, மருத்துவ சாதனங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை தயாராக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மேலும் எச்3என் 2, எச்1என்1 மற்றும் அடினோ வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்தது. ஆனால் தற்போது சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.