நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு நிறைவேற்றும் சட்டங்களை தடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது பவள விழாவையொட்டி, நேற்று மாலை சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

1948-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு காயிதே மில்லத்தால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்களுக்காகவும் செயல்படுவது பாராட்டத்தக்கது. இந்த சமூக நீதி கோட்பாடுதான் நான் கலந்துகொள்ள காரணமாகும். தி.மு.க.வுக்கும், இஸ்லாமிய சமூகத்துக்கும் இடையேயான தொடர்பு இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல. அண்ணாவையும், கருணாநிதியையும் இணைக்க பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம்தான். தி.மு.க. ஆட்சி காலத்தில் சிறுபான்மையின மக்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இஸ்லாமியர் வேறு, தான் வேறு என்று தலைவர் கருணாநிதி நினைத்ததில்லை. திராவிட மாடல் அரசு அவ்வாறே செயல்படுகிறது. தி.மு.க. ஆட்சியில், சிறுபான்மை ஆணையம் அமைக்கப்பட்டது. பள்ளிவாசல், தர்காவை பழுது பார்க்கும் மானியம் அதிகரிக்கப்பட்டது. வக்பு சொத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 20 மாதத்தில் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே இவ்வளவு திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சில கோரிக்கை தீர்மானங்கள் போட்டுள்ளீர்கள். அதை போடும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதை செய்து தரும் கடமை எனக்கும் உள்ளது. அதை மறக்க, மறுக்க மாட்டேன்.

நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதற்காக, தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரை அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இன்று கூட அதற்கான கோப்புகளை பார்த்தேன். விரைவில் அது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தியாவை காப்பாற்றும் ஆற்றல் சமூக நீதி, சகோதரத்துவம், சம தர்மம் ஆகிய 3 கருத்தியலுக்குத்தான் உண்டு. ஒற்றைத்தன்மையாக இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்கு கூட ஒப்புதல் தர மறுக்கிறார்கள். 4 மாதங்களுக்கு பிறகு மாநில அரசுக்கு உரிமை இல்லை என்கிறார். இந்த சாதாரண சட்டத்தை நிறைவேற்ற உரிமையில்லாத மாநிலத்துக்குத்தான் அவர் கவர்னராக இருக்கிறாரா?. ‘நீட்’ சட்ட மசோதாவை நீண்ட நாள் கிடப்பில் போட்டு, தாமதமாக ஜனாதிபதிக்கு அனுப்புகிறார். பல்கலைக்கழக வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது. இதுதான் கவர்னர் செயல்படும் லட்சணமா?. மத்தியில், 3 வேளாண் சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை சட்டமும் வேகமாக நிறைவேறும். ஆனால், சூதாட்டம், நுழைவுத் தேர்வால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க போடப்படும் சட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் இருக்கப்போகிறது. அந்த வெற்றிக்கு அடிப்படை ஒற்றுமை வேண்டும். 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி இதற்கு முடிவு கட்டும். அதற்காக நாம் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.