செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம். அறிவியலுக்கு எதிரானது: வேல்முருகன்

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது அறிவியலுக்கு எதிரானது என்றும் அநீதியான இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருப்பதாவது:-

வரும் 2023 ஏப்ரல் முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவது என்றும் குழந்தைகள் ஊட்டச் சத்து மையங்களிலும், மதிய உணவுத் திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்துவது என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இரும்பு சத்து, வைட்டமின் ஏ மற்றும் டி, அயோடின் ஆகியவற்றை கோதுமை, நல்லெண்ணெய், அரிசி, கடலெண்ணெய், பாமாயில், பால், உப்பு ஆகியவற்றில் நேரடியாக கலப்பதே செறிவூட்டல் என்பதாகும். இதனை ஃபெரஸ் ஃயூமெரேட் என்ற வடிவத்தில் இரும்புச் சத்தை அரிசியில் சேர்க்கும் திட்டமே செறிவூட்டப்பட்ட அரிசி திட்டமாகும். 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்டப் அரிசியை கலந்து நியாய விலைக் கடைகளில் வழங்குவதே மோடி அரசின் நோக்கமாகும். செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்று சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செறிவூட்டப்பட்ட அரிசியை சோதனை முறையில் பயன்படுத்திய 15 மாநிலங்களில் ஒன்றான, ஜார்கண்ட் மக்களிடம், உணவு உரிமை குறித்து கவனம் செலுத்தும் ஆஷா அமைப்பு ஆய்வு செய்தது. அதில், அம்மக்கள் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, இடைவிடாத வயிற்று பிசைவு, ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் ஆஷா நிறுவனம் விளக்கம் கேட்டும், ஒன்றிய அரசு வாய் திறக்க மறுப்பதோடு, இதுகுறித்து தயாரித்த ஆய்வறிக்கையும் தர மறுக்கிறது. அயோடின் சத்துக்குறைபாட்டை நீக்குவது என்ற பெயரில், அறிவியலுக்கு எதிரான அயோடின் கலந்த உப்பை திணிக்கப்பட்டது போன்று, இரும்புச் சத்து குறைப்பாட்டை காரணமாக சொல்லி செறிவூட்டப்பட்ட அரிசியை திணிக்க மோடி அரசு தயாராகி விட்டது. அயோடின் உப்பை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தியதால், எப்படி டாட்டா பெரு முதலாளிகள், தாரங்கதாரா, டால்மியா போன்ற மார்வாடி முதலாளிகள் பயன்பெற்றார்களே தவிர, மக்களுக்கு எந்த பயனுமில்லை. மக்கள் நோயாளிகளாக மட்டுமே மாறினார்கள்.
இரத்த சோகை, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், எலும்புருக்கி நோய்க்கு மருந்து உண்பவர்கள், செறிவூட்டப்பட்ட அரிசியையோ, உணவுப் பொருட்களையோ உண்ணக்கூடாது என ஒன்றிய அரசின் உணவுக் கட்டுப்பாடு ஆணையமே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த அரிசியை வலிந்து திணிப்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனே தவிர, வேறொன்றுமில்லை. செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தின் பின்னால் உள்ள அரசியலை, உள்நோக்கத்தை ஆஷா நிறுவனம் அம்பலப்படுத்தி உள்ள நிலையில், அது குறித்து இந்திய உணவுத் தர நிர்ணய ஆணையம் இதுவரை வாய் திறக்கவில்லை. மருத்துவ ஆய்விதழ் இரும்புச் சத்தையும், அயோடினையும் நேரடியாக உணவுப் பொருளில் கலப்பதன் தீமையை லேன்செட் போன்ற புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழ்கள் எச்சரித்தும், அதனையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை. இந்த உணவு செறிவூட்டல் ஆய்வு மையம் என்பது டாடா உள்ளிட்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த உணவு செறிவூட்டல் ஆய்வு மையம் தான் செறிவூட்டப்பட்ட அரிசியை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது.

அதே போன்று, இந்த செறிவூட்டல் திட்டத்திற்கு பின்னால் உள்ள இன்னொரு கெய்ன் என்ற அறக்கட்டளையும் இருக்கிறது. இவை தவிர, அபாட் மருந்து நிறுவனம் அல்ட்ரா ரைஸ் என்ற பெயரில், செறிவூட்டப்பட்ட அரிசிக்கு உலக காப்புரிமை பெற்றிருக்கிறது.செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தால் டாட்டா, அபாட் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் குறைந்தது, 3,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் மட்டுமே இருக்கிறதே தவிர, மக்களின் நலன் எள்ளளவும் இல்லை. கைவிட வேண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காக, மக்களின் உடல் நலமும், மண்ணின் சிறு, குறு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளின் பொருளியல் நலனும் சூறையாடப்படுகிறது. இது தான், செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தின் செயல்படுத்துவதற்கான நோக்கம். எனவே, அறிவியலுக்கு மாறான, இயற்கைக்கு எதிரான இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை, தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.