புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த மாதம் 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்ட சமுதாயத்தினரை பற்றி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். பிரசார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக சீமான் பேசிய வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்து ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது கடந்த மாதம் 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் கருத்து தெரிவித்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே சீமான் மீது போடப்பட்ட வழக்கில் இந்த 3 பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.