பிளஸ் 2 தமிழ் மொழி பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 12ஆம் வகுப்பு நேரடி பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என அனைவருக்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வராதது அதிர்ச்சி அளித்துள்ளது. பள்ளி மாணவர்களில் 49559 மாணவர்களும் தனித் தேர்வர்களில் 1115 பேரும் தமிழ் தேர்வை எழுத வரவில்லை. இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் தமிழ் மொழி தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்தது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. பொதுத் தேர்வை இத்தனை ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.
கல்விக்கண் திறந்த காமராஜரால் கல்வியில் தமிழ்நாடு முதன்மை இடத்தில் இருந்த நிலையில், தற்போது கல்வியின் தரம் குறைந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை தருகிறது. தமிழ் மொழி நம் தாய் மொழியாக இருக்கும் நிலையில், தமிழ் மொழி தேர்வை எழுத இத்தனை ஆயிரம் மாணவர்கள் வராதது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. தமிழ் மொழியின் அவசியத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடா – தமிழகமா என்று விவாதிப்பவர்கள் தமிழ் மொழியின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழ் மொழி தேர்வை மாணவர்கள் எழுதாதது குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும். இனி வரும் காலங்களில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு தலை குனிவு. தேர்தலின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருவது போல், தேர்வுகள் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழ்நாடு அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! தமிழ் மொழிப்பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.