சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி

சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து, நிதி ஒதுக்கக் கோருதல் மற்றும் தொடர்பாக தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு வேளாண்மையை விரிவாக்குவதும், பாசனப் பரப்பை அதிகரிப்பதும் தான் தீர்வு என்பதால், அதற்கான திட்டங்களை செயல்படுத்தக் கோரி இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். தமிழ்நாட்டில் நீர்வளமும், பாசனக் கட்டமைப்புகளும் மிகுந்த மாவட்டங்களில் ஒன்று அரியலூர் மாவட்டம்.

காவிரி பாசனப் பகுதியின் அங்கமாக அரியலூர் மாவட்டம் திகழும் போதிலும் வேளாண் வளர்ச்சி அம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. அதற்கான காரணங்களில் முதன்மையானது அரியலூர் மாவட்டத்தில் பாசனக் கட்டமைப்புகள் கடந்த பலநூறு ஆண்டுகளாக முறையாக பராமரிப்பு செய்யப்படாதது தான். அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 97 ஏரிகள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 482 ஏரிகள், ஊரக உள்ளாட்சிகளில் 49 ஏரிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 4 ஏரிகள் என மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கொள்ளிடம், மருதையாறு என இரு ஆறுகள் பாய்கின்றன. இவ்வளவு நீர்நிலைகள் இருந்தாலும் அவற்றின் பயன்கள் அரியலூர் மாவட்ட உழவர்களுக்கு கிடைக்கவில்லை.

திருமானூரை அடுத்த கண்டராதித்தம் கிராமத்தில் 1578 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கும் செம்பியன் மாதேவி ஏரியின் ஆழம் 18 அடி. இது தான் அரியலூர் மாவட்டத்தின் பெரிய ஏரி. ஆனால், 7 அடி உயரத்திற்கு தூர் மண்டிக் கிடப்பதால் அதன் கொள்ளளவு பாதியாக மேல் குறைந்துவிட்டது. பொன்னேரி எனப்படும் சோழ கங்கம் ஏரி 16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது. ஆனால், பரப்பளவு இப்போது படிப்படியாக குறைந்து, அதன் ஒட்டுமொத்த சுற்றளவே 5 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இந்த ஏரி நினைவு தெரிந்த வரையில் தூர்வாரப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரி கரைவெட்டி ஏரி. இது பறவைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது.

1100 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கும் இந்த ஏரி, சோழர்கள் காலத்திற்குப் பிறகு 1957ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் ஒருமுறை தூர்வாரப்பட்டது. அதன்பிறகு, இன்றுவரை இந்த ஏரியில் எந்தப் பராமரிப்பும் நடைபெறவில்லை. இந்த ஏரியின் ஆழம் 35 அடி முதல் 45 அடி வரை ஆகும். ஆனால், இப்போது பல இடங்களில் 15 அடி முதல் 20 அடி வரை தூர்மண்டிக் கிடக்கிறது. அரியலூர் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரி சுக்கிரன் ஏரி. இதன் பரப்பளவு 1187 ஏக்கர். சுக்கிரன் ஏரி 1060 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை ஒருமுறை கூட இந்த ஏரி முழுமையாக தூர்வாரப்படவில்லை.

ஒரு காலத்தில் தென்னை மரமே மூழ்கும் அளவுக்கு ஆழமாக இருந்த சுக்கிரன் ஏரியில், இன்று 5 அடி ஆழத்திற்கு கூட தண்ணீரைத் தேக்க முடியவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தூத்தூரில் அமைந்துள்ள தூத்தூர் ஏரி, காமரசவல்லியில் அரசன் ஏரி, ஏலாக்குறிச்சி வண்ணான் ஏரி, வேங்கனூர் ஆண்டியோடை ஏரி, சுள்ளான்குடி ராமுப்பிள்ளை ஏரி, பளிங்கநத்தம் மானோடை ஏரி போன்றவை 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அமைந்துள்ள ஏரிகள். அரியலூர் மாவட்டத்தின் பெரிய ஏரிகளுக்கு கொள்ளிடம் ஆறு, புள்ளம்பாடி கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வருவதற்கும், பெரிய ஏரிகள் நிரம்பினால் அதன் உபரி நீர் தானாகச் சென்று சிறிய ஏரிகளை நிரப்பிவிடும்.

இத்தகைய கட்டமைப்பு தமிழ்நாட்டின் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லை. சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட இத்தகைய கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாதது தான் அரியலூர் மாவட்டம் இப்போது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு காரணம். அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகளை, குறிப்பாக 100 ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட ஏரிகளை தூர்வாருதல், ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் இடையிலான நீர்வரத்துக் கால்வாய்கள், ஏரிகளை இணைக்கும் கால்வாய்கள் ஆகியவற்றை புதுப்பிப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் வட்டத்தையும் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும்.

அதற்கான திட்டம் தான் அரியலூர் சோழர் பாசனத் திட்டம் ஆகும். அரியலூர் சோழர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அரியலூர் மாவட்டத்தின் பாசனப் பரப்பு இப்போதுள்ள 90,710 ஏக்கரில் இருந்து இரு மடங்காக உயரும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய 6 ஒன்றியங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும். அரியலூர் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் பல அடி உயரும். கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் பகுதிகளிலும் நீர்வளம் மேம்படும். கரைவெட்டியில் பறவைகள் சரணாலயமாக திகழும் 134 ஏக்கர் பரப்பளவிலான வேட்டக்குடி ஏரிக்கு நீர் வரத்து அதிகமானால் அங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், அது வேடந்தாங்கல் ஏரிக்கு இணையான சுற்றுலாத்தலமாக மாறும். அது மாவட்ட வளர்ச்சிக்கு உதவும்.

அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமானது தான். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1922-ஆம் ஆண்டு வாக்கில் சோழர் கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நீர் கொண்டு செல்லும் கால்வாய்களின் பாதைகள் அடையாளம் காணப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கால திட்டத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்க முடியும். அதை இன்றைய அரசால் தான் செய்ய இயலும். எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 20-ஆம் நாள் தாக்கல் செய்யப்படவுள்ள 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை இடம்பெறச் செய்ய வேண்டும். அத்திட்டத்தை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், அதனடிப்படையில் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.