தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே: கி.வீரமணி

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே. மாற்றம் என்பதே மாறாதது என்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பெரியார் இறுதியாக அறிவித்து களத்தில் நின்ற போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும். கருணாநிதி அதற்கான சட்டத்தையும் இயற்றினார். அதனை எதிர்த்து 13 சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். அதன்படி சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றின்படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற சட்டத்தைச் செயல்படுத்தும் முன்பே, பெரியார் தனது இறுதி மூச்சைத் துறந்தார். 2021ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்துத் தேர்வு பெற்ற 22 மாணவர்கள் உள்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது. பெண் ஓதுவார் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டார்.

அதிமுக ஆட்சியில், மதுரையில் அழகர்கோவில் கட்டுப்பாட்டில் இருந்த அய்யப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவரும், நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள கோவிலில் தியாகராஜன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவரும் நியமனம் செய்யப்பட்டனர். நீதிபதி மகராஜன், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அளித்த பரிந்துரைகளின்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் திமுக அரசால் திருச்சி குமார வயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் நியமன ஆணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. அக்கோவிலில் அர்ச்சகர்களாகப் பணியாற்றிய அர்ச்சகப் பார்ப்பனர்களின் மனுவின் மீதுதான் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற வழக்குகள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு நீதிபதியிடமே வருவதும், அந்த நீதிபதியும் தங்கள் மக்களுக்குச் சாதகமாக தீர்ப்பளிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. பகுத்தறிவாளர்களைக் கிண்டலடிப்பது, தேவையில்லாமல் பெரியார் மணியம்மையார் திருமணத்தை சம்பந்த சம்பந்தம் இல்லாமல் விமர்சிப்பது இவரின் போக்காக இருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆகமம் என்பது ஒரு ஜாதிக்கு மட்டுமா? ஆகமம் என்பது எல்லாம் ஒரு ஜாதியினருக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிப்பதுதானா? ஆகமங்கள் சமஸ்கிருதத்தில் மட்டும்தான் உள்ளனவா? அந்த ஆகமங்களை எழுதியவர்கள் யார்? எந்த ஆண்டில் எழுதினார்கள்? என்ற கேள்விகளுக்கு இடம் உண்டா? அப்படியே பார்க்கப் போனாலும் இவர்கள் கூறும் ஆகமங்கள் காலம் காலமாக அட்சரப் பிசகின்றிதான் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? 1947ம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று இருந்ததே – அது இப்பொழுது அரசு சட்டத்தால் மாற்றி அமைக்கப்படவில்லையா? அப்பொழுது ஜி.ஆர்.சுவாமிநாதன்கள் பிறக்காத காரணத்தால் தப்பியதா? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள். அவர்களுடைய தந்தையார் செய்யும் பூஜை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்தவர்கள் என்று சொல்ல இயலாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளதே. முறைப்படி பயிற்சி பெற்றவர்களுக்கு தகுதியில்லையா? எல்லாம் தெரிந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, இந்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைந்த குழு கூறும் உண்மைத் தகவலுக்கு என்ன சொல்லப் போகிறார்? ஆகமம் தெரியாதவர்கள் அர்ச்சகராக இருக்கலாமாம், தொடரலாமாம்; முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகராக ஆகத் தகுதியில்லையாம். இது ஜாதி அடையாளமாகப் பார்க்கப்படுவதன்றி வேறு என்ன?

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே. மாற்றம் என்பதே மாறாதது. பார்ப்பனர் அல்லாதார் முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றிருந்தாலும், அவர் அர்ச்சகரானால், சாமி தீட்டுப் பட்டுவிடும் என்றால், சாமியின் சக்தியையே கேவலப்படுத்துபவர்கள் யார்? மாற்றம் என்பதுதான் மாறாதது! அது எல்லா விஷயத்திலுமே என்பதை நீதிமன்றம் உணரவேண்டும். கோவில் விஷயத்திலும் மாற்றங்கள் வந்துள்ளன. அவற்றை வசதியாக மறந்துவிட்டு, ஆகம விதிகள் என்றும், அதனை மாற்ற முடியாது – கூடாது என்றும் பார்ப்பனர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று சொல்லுவது எல்லாம் ஜாதி உணர்வுக்கு – எதிரான பெரும் அலையை ஏற்படுத்தக் கூடியனவே!

இந்த 2023 ஆம் ஆண்டிலும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்கள்’ என்று கண்கொண்டு பார்க்கிறார்களா? இந்தப் பெரும்பான்மை மக்கள் பெரும்பாலும் இந்துக்கள்தானே. அவர்கள் பயிற்சி பெற்று இருந்தாலும், இந்துக் கோவிலில் அர்ச்சகர் ஆகத் தகுதி இல்லை என்று கூறுவது விபரீதம் அல்லவா! அண்டை மாநிலமான கேரளாவில், திருவாங்கூர் தேவசம் போர்டுக்குச் சொந்தமான 1200 கோவில்கள் உள்ளன. பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கியது – அதில் 6 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் (அக்டோபர் 2017). கேரளாவை பாருங்கள் அரசமைப்புச் சட்டம் கேரளாவுக்கு ஒன்று; தமிழ்நாட்டுக்கு வேறு ஒன்றாக இருக்க முடியாது என்பது கனம் நீதிபதிக்குத் தெரிந்ததோ, இல்லையோ! முதலமைச்சர் ஆட்சியின் நூறாவது நாளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட – கம்பீரமான சாதனைக்கு ஓர் அறைகூவல் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற முறையில் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளில் நமது அரசு ஈடுபடும் என்பதில் உறுதி. காலந்தாழ்த்தாமல் இதுகுறித்து உரிய ஆலோசனைகளை உரியவர்களிடம் பெற்று செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.