பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல் நாட்டை ஆண்டு வருகிறார்: மல்லிகார்ஜூன கார்கே

இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஷ் கோயல் வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அதேபோல் லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்திலும் உரையாற்றினார் ராகுல். அங்கு பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கத்தான் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டது என்றார். மேலும் இந்தியாவின் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துமே தாக்கப்படுகின்றன; ஒடுக்கப்படுகின்றன. இதனால் மக்களின் குரலை வெளிப்படுத்துவதில் நெருக்கடி உருவாகி இருக்கிறது என்றார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார். ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இதனை காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சி கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார். பிரதமர் மோடி முன்னர் சீனா சென்ற போது நமது நாட்டை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். அதாவது. சீனாவில் நீங்கள் கூறிய கருத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். முன்பு, நீங்கள் இந்தியராக பிறந்ததற்காக வெட்கப்பட்டீர்கள். இப்போது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். இது இந்தியாவையும் இந்தியர்களையும் அவமானப்படுத்தவில்லையா? உங்கள் அமைச்சர்களுக்கு அவர்களின் நினைவுகளைப் புதுப்பிக்கச் சொல்லுங்கள். “கடந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ அதைத்தான் இந்தியாவில் பிறவி எடுத்திருக்கிறோம் என்று மக்கள் உணர்ந்த காலம் ஒன்று இருந்தது” என்று தென் கொரியாவில், நீங்கள் சொன்னீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் ‘உண்மையின் கண்ணாடி’யைப் பாருங்கள்! இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி, நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விஜய்சவுக் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமின்றி, பாரத ராஷ்டிர சமிதி, இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் இந்தியாவை இழிவுபடுத்தும்வகையில் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் மன்னிப்பு கேட்குமாறு பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. அதை கண்டிக்கும்வகையில் இப்பேரணி நடந்தது. பேரணி முடிவில், விஜய் சவுக்கில் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவினர், ஜனநாயகத்தை நசுக்கி அழித்தவர்கள். அவர்கள் தற்போது ஜனநாயகத்தை காப்பது போலவும், நாட்டின் பெருமையை காப்பது போலவும் பேசி வருகிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை. பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல் நாட்டை ஆண்டு வருகிறார். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை நசுக்கி வருகிறார்கள். பிரதமர் மோடியே வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை எத்தனையோ தடவை கேலி செய்துள்ளார். உதாரணமாக, சீனா, தென்கொரியா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அப்படி பேசியுள்ளார். பிரதமர் இந்தியாவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம். ராகுல்காந்தி பேசினால் மட்டும் அதை குற்றமாக பார்க்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டுக்குழு அதானி குழும மோசடி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக மத்திய அரசு இதையெல்லாம் செய்து வருகிறது. அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துமாறு கோரி வருகிறோம். ஆனால், மத்திய அரசு கவனத்தை திசைதிருப்பி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறோம். கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு தொடர்ந்து கோருவோம். மேலும், மாநிலங்களவையில் என்னை பாரபட்சமாக நடத்துகிறார்கள். அவை முன்னவர் 10 நிமிடங்கள் பேசினார். ஆனால், நான் பேச எழுந்தவுடன் 2 நிமிடங்களில் சபையை ஒத்திவைத்து விட்டனர் என்று அவர் கூறினார்.