நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்திக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு நாள்களாக நாடளுமன்றம் முடங்கியுள்ளன.
அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு நிராகரித்து வருகின்றது.
இந்நிலையில், அதானி விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், திமுகவின் டி.ஆர்.பாலு, மதிமுகவின் வைகோ, சிவசேனை(உத்தவ் அணி) சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி அனைத்து எம்.பி.க்களிடமும் கையெழுத்து வாங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் பேரணி அல்லது போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திலிருந்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து பேரணியாக புதுடெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் சென்று, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி புகார் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை நோக்கி பேரணியாகச் சென்று, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதை வலியுறுத்தி புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 12.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தொடங்கும் இந்தப் பேரணியில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நாடாளுமன்றத்திலிருந்து எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்லவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.