இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று கையெழுத்தானது.
இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டித்தரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை முன்னெடுத்தது. அந்தவகையில் ஒரு வீட்டுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்தநிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.
இதற்கிடையில் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது ஒரு வீட்டை கட்டுவதற்கு தலா ரூ.28 லட்சம் தேவை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மந்திரியுமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் திட்டத்துக்கான கூடுதல் நிதியுடன் கூடிய உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி கோபால் பாக்லே முன்னிலையில் கையெழுத்தான இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தை இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கூறியதாவது:-
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக கூடுதல் நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் தீர்மானிப்பதற்கான உடன்படிக்கை கையெழுத்தாகி இருக்கிறது. 2020-ம் ஆண்டில் நான் ராஜாங்க மந்திரியாக பதவியேற்கும்போது இந்தியாவின் 4 ஆயிரம் வீட்டு திட்டம் அமலுக்கு வந்தது. இதில் 699 வீடுகளே முழுமைப்படுத்தப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 2 ஆயிரம் வீடுகளில் மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டியுள்ளது. இதனை உடனடியாக முடித்து பயனாளிகளிடம் வீட்டை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா பேரிடர், அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரூ.3 ஆயிரம் வரை சிமெண்ட் விலை அதிகரித்தது. அன்று ஒரு வீட்டுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் ரூ.28 லட்சம் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலையின்கீழ் எஞ்சியுள்ள வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இது முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் 10 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டமும் வெகுவிரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.