தப்பித்தவறி பாஜக மீண்டும் 2024-ல் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நிகழுமோ அதை யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு நாள் இரவில் 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் தாளும் செல்லாது என்று எப்படி அறிவித்தாரோ அதேபோல ஒருநாள் தொலைக்காட்சியில் தோன்றி இந்திய அரசமைப்பு சட்டம் செல்லாது என்றும் சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தொல் திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது:-
திரிபுராவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். பாஜகவின் வன்முறை வெறியாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை நாடு அறியும். புரட்சியாளர் தோழர் லெனினின் திருவுருவச் சிலையை அவர்கள் எப்படி அவமதித்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி நிகழும். அவை நிலையானது அல்ல. இன்றைக்கு பாஜக அங்கே வெற்றி பெற்றிருக்கிறது என்றால் தொடர்ந்து அங்கு அவர்களால் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. கடந்த முறை வெற்றி அளவுக்கு இந்த முறை அவர்கள் வெற்றி பெறவில்லை. கடந்த முறை பெற்ற வாக்குகள் அளவுக்கு இல்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. எதிர்பார்த்த வாக்கு சதவீதம் இல்லை. இந்த ஆத்திரத்தின் காரணமாகவே இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
சராசரியான ஒரு அரசியல் கட்சியாக பாஜகவை எடைபோட்டுவிடக்கூடாது. பாஜக தேர்தல் தோல்வியால் ஆட்சியை பிடித்திருந்தாலும் கூட அது தோல்வி தான். தேர்தல் தோல்வியால் ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பாஜகவை சராசரியான அரசியல் கட்சி என்று குறைத்து கருதிவிட முடியாது. இங்கு பேசிய அரசியல் தலைவர்கள் கம்யூனிஸ்டு கட்சிகளை பாஜக எப்படி அணுகுகிறது என்று கூறினார்கள்.. அண்ணன் முத்தரசன் அவர்கள் பாஜகவின் 3 எதிரிகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று சொன்னார்.. காங்கிரசை அதில் இணைக்கவில்லை.. அரசியல் ரீதியாக தேர்தல் ரீதியாக காங்கிரசும் அவர்களுக்கு எதிரி தான்.. ஆனால் கம்யூனிஸ்டுகளை காங்கிரஸ் போல அவர்கள் பார்ப்பதில்லை.. காங்கிரஸ் அவர்களுக்கு தேர்தல் களத்தில் எதிரி.. ஆட்சியை கைப்பற்றுவதற்கான களத்தில் எதிரி.. போட்டியாளர் என்ற அடிப்படையிலேயே எதிரி.. பாஜக இல்லையென்றால் காங்கிரஸ்.. காங்கிரஸ் இல்லையென்றால் பாஜக என்ற வகையிலேயே காங்கிரசை நேர் எதிரான ஆட்சி அதிகாரத்திற்கான போட்டியாளர் என்ற அடிப்படையிலேயே காங்கிரஸை எதிரியாக பார்க்கிறது. அதனால் தான் அவர்களது முழக்கங்களில் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று சொல்கிறார்கள்.. தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத தமிழகம் என்று சொல்கிறார்கள்.. ஆனால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட வேண்டும்.. அப்படியொரு தேசிய கட்சியே இருக்கக்கூடாது என்ற அடிப்படையிலேயே காங்கிரசை எதிரியாக நிறுத்தி அரசியல் செய்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகளை ஏன் அவர்கள் எதிரியாக பார்க்க வேண்டும். காங்கிரஸ் போல ஆட்சி அதிகாரத்திற்கு போட்டியாக கம்யூனிஸ்டு கட்சிகளை பார்க்கிறார்களா என்றால் இல்லை.. கொள்கை சார்ந்த எதிரியாக பார்க்கிறார்கள்.. தத்துவம் சார்ந்த எதிரிகளாக பார்க்கிறார்கள்.. அதனால் தான் ஆர் என் ரவி தமிழ்நாட்டிலே மார்க்ஸின் சிந்தனையால் இந்த தேசம் சிதைந்துவிட்டது என்று சொல்கிறார். கொள்கை களத்தில் பாஜகவின் முதல் எதிரி கம்யூனிஸ்டு தான்.. தேர்தல் போட்டிக்களத்தில் தான் காங்கிரசை எதிரியாக பார்க்கிறார்கள்.. அம்பேத்கரின் பாதங்களை தொட்டு வணங்குவார்கள், ஆனால் கொள்கை எதிரிகள் என்ற வரிசையில் கம்யூனிஸ்டுகள்.. பெரியார்வாதிகள்.. அம்பேத்கரியவாதிகள் என்று தான் வரையறுக்கிறார்கள்.. அப்படித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள்.. அம்பேத்கர் அவர்களை இந்துத்வா தலைவர் என்று உள்வாங்கிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்..
பெரியாரை அப்படி சொல்ல முடியாது.. கம்யூனிஸ்டுகளை அப்படி சொல்ல முடியாது.. அம்பேத்கரை பின்பற்ற கூடிய மக்களை இந்துக்கள் என்றும்.. அதனால் அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிரானவர் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் பகிரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. ஆனால் அடிப்படையிலேயே அவர்களது முதல் எதிரி அம்பேத்கர் தான்.. ஏன் என்றால் அவர் வரையறுத்து கொடுத்த அரசியல் அமைப்பு சட்டம் தான்.. அவர்களுடைய எதிரிகள் வரிசையில் இவை அனைத்தையும் தாண்டி..
கம்யூனிஸ்டுகளை, காங்கிரசை, பெரியாரியவாதிகளை இப்படி எல்லாரையும் கடந்து முதல் வரிசையில் இருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தான்.. தப்பித்தவறி பாஜக மீண்டும் 2024-ல் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நிகழுமோ அதை யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு நாள் இரவில் 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் தாளும் செல்லாது என்று எப்படி அறிவித்தாரோ அதேபோல, ஒருநாள் தொலைக்காட்சியில் தோன்றி இந்திய அரசமைப்பு சட்டம் செல்லாது என்றும் சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.