திருச்சி திமுகவில் உட்கட்சி மோதல்: திருச்சி சிவா வீடு மீது கல் வீசி தாக்குதல்!

திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது திமுகவினர் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவாவின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பபட்டுள்ளன. சிவா வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்படுள்ளது.

திருச்சி திமுகவில் அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள், திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே அவ்வப்போது முட்டல் மோதல் ஏற்படும். கடந்த 15 ஆண்டுகாலமாகவே திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே கட்சியில் இருந்த போதும், இருவருக்கும் இடையே மோதல், நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது. சிவாவை நேரு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவ்வப்போது சிவாவின் ஆதரவாளர்கள் நேருவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற ஒரு விழாவில் கே.என். நேரு பங்கேற்றார். சிவா வீட்டிற்கு அருகில் நடைபெற்ற விழாவில் ராஜ்யசபா எம்.பியான சிவாவின் பெயரை போடவில்லை என்றும், அவரை முறையாக அழைக்கவில்லை என்றும் சிவாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

இந்த நிலையில் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிவா வீட்டின் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சிவாவின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் திருச்சி சிவா வீடு முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு – திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்ட நிலையில் பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார். திருச்சியில் டென்னிஸ் அரங்கை திறக்க எம்பி சிவாவை அழைக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்தனர். இதையடுத்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவுக்கு எதிராக முழக்கங்களை இட்டனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் எம்பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் அவரது வீடு, வீட்டின் முன்புறம் நின்றிருந்த காரின் கண்ணாடி சேதமடைந்தது. அது போல் வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த நிலையில் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சம்பவத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பு தாக்குதல் நடத்தியது. மேலும் அமைச்சர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டியதாக கைது செய்யப்பட்ட திருச்சி எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குல் நடத்தியுள்ளனர். காவல் நிலையத்திற்குள் புகுந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அங்கிருந்த நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது வீசியுள்ளனர். இந்த தாக்குதலை தடுத்த பெண் போலீஸ் சாந்தி காயமடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.