என் வீட்டின் மீதான தாக்குதலால் மிகுந்த மனவேதனை அளிக்கிறதுல்: திருச்சி சிவா!

என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை கொடுக்கிறது என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் நேற்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது. இதனால் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் திருச்சி சிவாவை விழாவுக்கு அழைக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அமைச்சர் நேருவின் காரை மறித்து கருப்பு கொடியை காட்டி நேருவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து விழா நடந்த அதே தெருவில் திருச்சி சிவா வீடு இருக்கிறது. அந்த வழியாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிய அமைச்சர் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்தது. மேலும் போர்டிகோவில் வைக்கப்பட்டிருந்த சேர்களை உடைத்தனர்.

திருச்சி சிவா வீட்டின் மீதான தாக்குதல், அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய சம்பவம் ஆகியவற்றில் இரு தரப்பினரையும் சேர்ந்த ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நேற்றைய தினம் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பெண் போலீஸ் சாந்திக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர் திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அமைச்சர் நேருவின் வலதுகரங்களான காஜாமலை விஜய், துரைராஜ், நேருவின் ஆதரவாளர்களான முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகிய 4 பேர் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பக்ரைனுக்கு சென்றிருந்த திருச்சி எம்பி சிவா தமிழகம் வந்தார். அவர் திருச்சி விமான நிலையத்தில் கூறியதாவது:-

நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னைவிட என் கட்சி முக்கியம் என்பதால் பலவற்றை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவம் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனை தந்துள்ளது.

வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் என் வீட்டிலிருந்த வயதானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் பேச வேண்டி இருக்கிறது. மீண்டும் உங்களிடம் பேசுகிறேன். களைப்பில் இருக்கிறேன். மனச்சோர்வில் இருக்கிறேன். நான் எப்போதும் மனச்சோர்வு என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை. வயதானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும்போது சொல்லத் தோன்றுகிறது. மாலையில் விரிவாக பேசுகிறேன். வேறு எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. தயவுசெய்து எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.