அதானி பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே, நான் பேசாததை பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக லண்டன் சென்றார். அங்கிருக்கும் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பினார். அதேபோல் எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படுவதையும் அவர் கூறினார். அதானி விவகாரத்தையும் ராகுல் காந்தி விட்டு வைக்கவில்லை. இந்தநிலையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ராகுல் காந்தி தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். மேலும் எதிர்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என போராடி வந்த நிலையில், பாஜகவினர் ராகுல் காந்தியின் விவகாரத்தை கையில் எடுத்தனர். அதனால் நாடாளுமன்ற அவை முடங்கியது.
இந்தநிலையில் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வந்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதிலளிக்க தன்னை பேச அனுமதிக்குமாறு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து உரையாடினார். இந்தநிலையில் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் எனது கருத்தை பதிவு செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் நான் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. அதானி பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே, நான் பேசாததை பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான பிரச்சனைகளை மக்களிடம் இருந்து திசை திருப்ப ஒன்றிய அரசு முயற்சி செய்துவருகிறது. அதானி குறித்து நான் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மக்களவை சபாநயகரை சந்தித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கச் சென்றேன்; 4 ஒன்றிய அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுக்களை கூறினார்கள். அதானி பயன்பெற வேண்டும் என்பதற்காகவே விதிகள் திருத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அதானியின் முதலீடுகளுக்காக பிரதமர் மோடி வற்புறுத்தியதாக ராஜபக்ச கூறியுள்ளார். இந்திய ஜனநாயகத்தை பரிசோதிக்கும் நிகழ்வுகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன. நாளை நாடாளுமன்றத்தில் பேச எனக்கு அனுமதி வழங்கப்படும் என நம்புகிறேன்.
இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இவை செய்திகளில் அதிகம் வந்துள்ளது. நான் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர், நாங்கள் அந்த (எதிர்க்கட்சி) இடத்தில் பயணிக்கிறோம். ஜனநாயகத்திற்கு தேவையான நிறுவன கட்டமைப்பு பாராளுமன்றம், பத்திரிக்கை மற்றும் நீதித்துறை தான். அணிதிரட்டல் என்ற எண்ணம் மற்றும் அனைத்தையும் சுற்றி வருவது தடைபடுகிறது. எனவே, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதலை நாம் எதிர்கொள்கிறோம்.
ஒரு எம்.பி. என்ற முறையில், முதலில் நாடாளுமன்றத்தில் பதில் சொல்வதுதான் எனது கடமை. அதன்பிறகு ஊடகங்களிடம் பேசுகிறேன். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், அதானி விவகாரம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.
சபை ஒத்திவைப்புக்கு பிறகு வெளியே வந்த அவரிடம், ‘மன்னிப்பு கேட்பீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி புன்னகையையே பதிலாக தந்தார். அவர் மேலும் கூறியதாவது:-
நான் நாட்டுக்கு எதிராகவோ, நாடாளுமன்றத்துக்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன். அனுமதிக்காவிட்டால், வெளியே பேசுவேன். நான் பேசுவது பா.ஜனதா விரும்புவதுபோல் இருக்காது என்று அவர் கூறினார்.