ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்டர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 66,575 வாக்குகள் வித்தியாத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து நன்றி கூறினார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற அவர் டெல்லி சென்றிருந்தார். அவர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் வைத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. பரிசோதனையில் நுரையீரலில் லேசாக தொற்று இருந்ததால் மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் கூறும்போது, ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார்.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் மூர்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்ன பிரச்சனை? என்பது பற்றி விளக்கினார். இதுபற்றி டாக்டர் மூர்த்தி கூறியதாவது:-
ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றாக இருக்கிறார். நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருமல் அதிகமாக இருந்தது. டெல்லி சென்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம். இருமல், நுரையீரல் தொற்று பிரச்சனைக்கு ஆண்டிபயாட்டிக் கொடுத்து இருக்கிறோம். இன்று ஐசியூவில் உள்ளார். மாலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.