தமிழகத்தில் உச்சபட்ச சர்வாதிகாரியாக இதுவரை எந்த அரசியல்வாதியும் இல்லை. எங்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அ.தி.மு.க.வுக்கு அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்படுவது சட்ட விதி. தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த தேர்தல் முடிந்த பின்னால் அவர்கள்தான் அமைப்பு ரீதியாக கிளைக் கழகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என பல நிலைகளில் தேர்தலை நடத்த பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், உறுப்பினர்களாக இருப்பவர்களை புதுப்பிப்பதற்கும் உறுப்பினர் படிவம் கொடுக்க வேண்டும். அந்த பணி முடிந்த பிறகு உறுப்பினர் அடையாள அடைகள் வழங்கப்பட வேண்டும். இந்த பணிகள் முடிந்த பிறகுதான் கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு தேர்தல்கள் நடக்கும். அதன் பிறகுதான் அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெறும். இதுதான் அ.தி.மு.க. சட்ட விதி.
எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக்பாக்கெட் அடித்து செல்வது போல பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது ஏற்றுக் கொள்ள கூடியதா? அ.தி.மு.க. பொதுக்குழுவில் அராஜகம் நடந்தது. எனக்கு இப்போது தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜி. இது போன்ற அராஜகமான பொதுக்குழு இதுவரை நடைபெற்றதே இல்லை. இந்திய தேர்தல் ஆணையமும் அந்த பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை. 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்களை சட்ட விதிகளுக்கு புறம்பாக நிறைவேற்றியது செல்லாது என்று நாங்கள் கீழ்கோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு வரை வழக்கு தொடர்ந்தோம். அதில் பல விதமான தீர்ப்புகள் பெறப்பட்டது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஈரோடு இடைத்தேர்தலில் கழக தொண்டர்கள் இவர்கள் மீது நம்பிக்கை இருந்தால் இவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இரட்டை இலையும் கொடுத்தாச்சு. நாங்களும் வாபஸ் வாங்கி விட்டோம். அதற்கு பின்னாலும் 66 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. இயக்கத்தை தோற்கடிக்க செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. சட்ட விதிகளை கீழே தூக்கி போட்டு விட்டு மனசாட்சி இல்லாமல் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று நாம் கொடுத்த உச்சபட்ச மரியாதையை தனக்கு உரியது என்று தானே பட்டம் சூட்டிக் கொண்டது போல நிறைவேற்றிக் கொண்டனர். ஒரு சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற விதி இருந்தது. அதையும் மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும், 5 வருடம் தலைமை கழக நிர்வாக பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற சட்ட விதியை மாற்றி, மிட்டாதார், மிராசுதார், கோடீசுவரர்கள்தான் அந்த பதவிக்கு போட்டியிடக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி தானும், தன்னை சுற்றி இருப்பவர்களும் மட்டும்தான் பதவிகளுக்கு வர வேண்டும் என்ற சட்ட விதியை திருத்துவது எந்த விதத்தில் நியாயம். இதை எதிர்த்து தான் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றோம்.
இப்போது எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கான பணிகளை துரிதமாக செய்து வருகிறோம். இந்த இயக்கத்தை மீட்டெடுக்கும் பணியை முழுமையாக செய்வோம். தமிழகத்தில் உச்சபட்ச சர்வாதிகாரியாக இதுவரை எந்த அரசியல்வாதியும் இல்லை. அந்த நிலைக்கு எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருக்கிறார். இதை நாட்டு மக்கள் ஏற்கனவே நன்றாக அறிந்து இருக்கிறார்கள். இதை கட்சி தொண்டர்களுக்கு தெரியப்படுத்துவதுதான் எங்களின் நிலை. சர்வாதிகாரமாக ஒரு தேர்தலை அறிவித்து இருக்கிறார்கள். அந்த தேர்தலில் தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை நாசப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு நாங்கள் அம்பலப்படுத்துவோம். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இப்படியா கட்சி நடத்தினார்கள். அதனால்தான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி விமானத்தில் சென்ற போது ஒரு பயணி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அது போன்ற கருத்துதான் இன்று பரவலாக தொண்டர்களிடம் இருக்கிறது. அவர் தமிழ் நாட்டுக்குள் எங்கு சென்றாலும் அவரை நோக்கி எதிர்ப்பு அலை பாயும். இந்த எதிர்ப்பை அவரே உருவாக்கிக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. உங்களுடைய கட்சி பிரச்சினையை சிவில் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இப்போது வழக்கு நடந்து வருகிறது. எங்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் பெரிய மாநாடு நடத்தப்படும். அதன் பிறகு மாவட்டம்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இந்த கட்சி மக்களிடம் செல்வாக்கு உள்ள கட்சி. தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும்.
விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது என்பது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் பழனிசாமி திருந்தவில்லை.
இனியும் இவர்கள் திருந்துவார்கள், ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுக பற்றி எதுவும் தெரியாத கூட்டம் அரசியல் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.