உச்சநீதிமன்றத்தை ஒன்றிய பாஜக அரசு கைப்பற்ற துடிப்பதாக எதிர்கட்சிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நீதித்துறையை வெளிப்புற தாக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்க, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பு விழாவைக் கூட பிரதமர் நரேந்திரமோடி புறக்கணித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தலைமை நீதிபதி பதவி ஏற்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.
கடந்த நவம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் கூறி, இது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என விமர்சித்தார். அவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகள் இருப்பதில்லை என்றும் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும், நீதி அமைப்பு பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தார்.
நாட்டின் நீதி அமைப்பை ஆளும் பாஜக அரசு கைப்பற்ற துடிப்பதாக காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கபில்சிபல் தெரிவித்தார். இது குறித்து ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல் கூறும்போது, ‘‘அரசாங்கம் நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது. சட்ட அமைச்சருக்கு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் பற்றி அவருக்குத் தெரியாது என்று நான் முன்பே கூறியுள்ளேன். அது போல அனைத்து நிறுவனங்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் கடைசி கோட்டை நீதித்துறை. உயர் நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமனம் குறித்த இறுதி வார்த்தை அரசாங்கத்திடம் விடப்பட்டால், அவர்கள் இந்த நிறுவனங்களை, அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சியின் சித்தாந்தத்துடன் இணைந்த நபர்களால் நிரப்புவார்கள்” என தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் பிரபல தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நீதித்துறைக்கு வெளியே ஏற்படும் தாக்கங்களிலிருந்து அதைப் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கே இருக்கும் அனைத்து முறைகளும் தவறே இல்லாமல் துல்லியமானது இல்லை. ஆனால் இது (கொலீஜியம்) நாம் உருவாக்கியதிலேயே சிறந்த அமைப்பு. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இது முக்கிய மதிப்பாகும். நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நீதித்துறையை மற்ற தாக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நீதித்துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.
உணர்வில் வேறுபாடு இருப்பதில் என்ன தவறு? ஆனால், அத்தகைய வேறுபாடுகளை நான் வலுவான அரசியலமைப்பு அரசியற் உணர்வுடன் கையாள வேண்டும். நான் சட்ட அமைச்சருடன் பிரச்சினைகளில் சேர விரும்பவில்லை, கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். நான் நீதிபதியாக இருந்த 23 வருடங்களில் ஒரு வழக்கை எப்படி தீர்ப்பது என்று யாரும் சொல்லவில்லை. அரசாங்கத்திடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை. நீதித்துறைக்கு எந்த அழுத்தமும் இல்லை என்பதற்கு தேர்தல் கமிஷன் தீர்ப்பு சான்று. இவ்வாறு அவர் கூறினார்.