நாம்தமிழர் கட்சி இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: சீமான்!

நாம் தமிழர் கட்சி இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

முன்னதாகவே இந்த பாசறை கூட்டங்களை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம் . பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு, அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார், குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை. நாங்கள் வந்த பின்னர் தான் தேடித்தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கிறது.

திமுக அரசு காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு முருகன், சாந்தன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது. 35 ஆண்டு கால போராட்டம் சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை குறித்து அடைப்பதற்காக அல்ல . சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் இருக்கிறது. இந்த நாலு பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வரும் 23ஆம் தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை செய்ய அரசுக்கு என்ன திறன் உள்ளது? அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. அதனை செயலாக்கம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதில் இங்கு பிரச்சனை இல்லை. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். அதுதான் முக்கியம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜகவின் பி டீமான செயல்பட்டு திமுகவின் வாக்குகளை பிரிப்பதாக எழும் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, நான் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் இல்லை. நாட்டை பிடிக்க வந்த ஆள். நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். அதற்காக நான் திமுகவின் பீ டீம் ஆகிவிடுவேனா? அரசியலில் நான் தான் ராஜா. நாங்கள் தான் நம்பர் ஒன் என்று தெரிவித்தார்.