பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓபிஎஸ் தான் பொருத்தமாக இருப்பார்: ஜெயக்குமார்

பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓபிஎஸ் தான் பொருத்தமாக இருப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர் சந்தித்து கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிக் பாக்கெட் அடிப்பது போல் பெற நினைக்கிறார்கள். தானும் தன்னை சுற்றியுள்ளவர்களும் பதவிக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்சி விதிகளை மாற்றியுள்ளார்கள். இபிஎஸ் ஒரு சர்வாதிகாரி என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரின் பேச்சு விரக்தியில் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஓபிஎஸ் நிதானத்தில் இருக்கிறாரா என்ற சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை பிக்பாக்கெட் என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்தும், என்னிடம் இருந்தும் பல்வேறு துறைகளை பறித்த பிக் பாக்கெட் தான் ஓபிஎஸ்.

டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மூலம் அரசியல் வெளிச்சம் பெற்றவர் தான் ஓபிஎஸ். ஆனால் அவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் தான் ஒபிஎஸ். கட்சி எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ். பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சியில் சேர்ந்தாலும், அந்த கட்சி விடியாது. ஓபிஎஸ் கைக்கூலியாக இருந்துகொண்டு, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு அரசியல் சகுனி. ஓபிஎஸ் தரப்பினர் விரக்தியில் இருக்கிறார்கள்.

கட்சிக்கு தலைமை வேண்டும் என்பதால் உரிய நேரத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்களின் பலம், மக்கள் பலம் மூலம் எதிர்கொண்டோம். அதிகார பலம், பணம் பலம் ஆகியவற்றை எதிர்த்து 44 ஆயிரம் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதில் உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான். அதிமுகவின் அடிப்படை வாக்கு வாங்கி அப்படியே தான் இருக்கிறது. அதேபோல் இடைத்தேர்தலை வைத்து, பொதுத்தேர்தலை கணிக்க முடியாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஓபிஎஸ் வீட்டிற்கு செல்கிறார்கள். திமுகவை எதிர்த்து தான் அதிமுக உருவாகியது. துக்கம் விசாரிக்க போவது பண்பாடு. அதனை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அங்கு சிரித்துக் கொண்டே பேசிக் கொள்கிறார்கள். சிரிப்பது தான் அரசியல் நாகரீகமா.. திமுகவின் பி டீம் தான் ஓபிஎஸ். இவ்வாறு அவர் கூறினார்.