பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது!

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி பதற்றத்தை ஏற்படுத்திய அம்ரித்பால் சிங் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பஞ்சாப்பில் பதற்றம் நிலவுவதால் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் அதிகளவில் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பஞ்சாப்பை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த கோரிக்கைகள் எழாமல் இருந்த நிலையில் மீண்டும் தலைத்தூக்கி உள்ளது. இந்தியாவில் இருந்து பஞ்சாப்பை பிரிக்க உலகின் பல இடங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வாக்கெடுப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் வசித்து வரும் முன்னாள் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஜஸ்வந்த் சிங் தகேதார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பஞ்சாப்பில் வசிப்பவர்கள் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் அறிவுறுத்தலில் வெளிநாடுகளில் உள்ள சிலர் இது குறித்து பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் கொடுக்கும் பணத்துக்காக இப்படி செயல்படுகின்றனர் என தெரிவித்து இருந்தார்.

இந்நலையில் இந்தியாவின் பஞ்சாபில் வசிக்கும் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இவர்களுக்கு பின்னாலும் பாகிஸ்தான் உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். அம்ரித்பால் சிங் என்பவர் நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட ‛வாரிஸ் பஞ்சாப் தே” என அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் ஜல்லு புர் கைரா பகுதியை சேர்ந்த இவர் துபாயில் வேலை செய்தார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். இதையடுத்து அவர் காலிஸ்தான் பிரிவினை பேசி வந்தார். காலிஸ்தான் பிரிவினையில் தீவிரம் காட்டிய ஜர்லைன் சிங் பிந்தரன்வாலேவை குறிப்பிடும் வகையில் அம்ரித்பால் சிங்கை அவரது ஆதரவாளர்கள் ‛பிந்திரன்வாலே 2.0′ என அழைத்து வந்தனர். மேலும் அம்ரித்பால் சிங்கும் தன்னை பிந்தரன்வாலேயின் சீடர் என கூறிக்கொண்டு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தார். இதையடுத்து அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்வைத்தனர்.

கடந்த மாதம் அம்ரித்பால் சிங்கின் உதவியாளரான லவ்ப்ரீத் டூபன் கடத்தல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அஜ்னாலா காவல் நிலையம் அம்ரித்பால் சிங் தலைமையில் முற்றுகையிடப்பட்டது. போலீசாருக்கும், அம்ரித்பால் சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே வாள் சண்டை நடந்தது. மேலும் காலிஸ்தான் பிரிவினை வாதம் பேசி ஆட்களை சேர்க்க அவர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அம்ரித்பால் சிங் ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு நேற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில் அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். இதையடுத்து காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசும் அம்ரித்பால் சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சினிமா பாணியில் அவரை விரட்டி மடக்கி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை என்பது சரியான திட்டமிடலுடன் கையாளப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 2ம் தேதி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அம்ரித்பால் சிங் பற்றி பேசப்பட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய கைது நடவடிக்கையை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் படைகளை பஞ்சாப்பிற்கு அனுப்பி வைத்தது. பஞ்சாப்பில் நேற்று ஜி20 மாநாட்டுக்கான கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் அடுத்த நடவடிக்கையாக அம்ரித்சிங் பாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் தற்போது பஞ்சாப்பில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன், மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க இன்று மதியம் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.